பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை அரசு நிறுத்தக் கூடாது- ராமதாஸ்

 
ramadoss

நியாயவிலைக்கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை அரசு நிறுத்தக் கூடாது, ஏழைகள் வயிற்றில் மீண்டும், மீண்டும் அடிக்கக் கூடாது என பா.ம.க.  நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ரேசனில் மே மாதத்திற்குரிய பருப்பு, பாமாயில் கிடைக்கும்- தமிழக அரசு உறுதி |  May months dal, palm oil will be available in ration - Tamil Nadu  government confirmed

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும்  பருப்பு, பாமாயில் ஆகியவற்றை ஒரு தரப்பினருக்கு நிறுத்தவும், மீதமுள்ளவர்களுக்கு விலையை உயர்த்தவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக  ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மூன்றாவது முறையாக மின்கட்டண உயர்வு என்ற இடியை  ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் மீது இறக்கியுள்ள தமிழக அரசு,  துவரம் பருப்பு, பாமாயில் வழங்குவதையும் நிறுத்தி ஏழைகளின் வயிற்றில் மீண்டும், மீண்டும் அடிக்கக் கூடாது.

2007-ஆம் ஆண்டில் பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்ட போது, அதனால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஓரளவாவது போக்கும் நோக்கத்துடன் பருப்பு, பாமாயில், மளிகை சாமான்கள் வழங்கும் சிறப்பு பொதுவினியோகத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.  இத்திட்டத்தின்படி வழங்கப்பட்டு வந்த உளுந்து, மளிகை சாமான்கள் நிறுத்தப்பட்டு விட்ட நிலையில், இப்போது துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றையும்  நிறுத்த தமிழக அரசு முயற்சிப்பது  அநீதியாகும்.

ராமதாஸ் வாழ்க்கை வரலாறு: மக்கள் மருத்துவர் முதல் பா.ம.க நிறுவனர் வரை..! -  முழுமையான தொகுப்பு! Biography of PMK leader Ramadas - Vikatan

பாமாயில், துவரம்பருப்பு வழங்கும் திட்டத்திற்கான மானியச் செலவு அதிகரித்து விட்டதால், அத்திட்டத்தை கைவிடும்படி நிதித்துறை  கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து  பருப்பு , பாமாயில் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தவும், பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.  மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தும் விவகாரத்தில் அரசின் முடிவைத் தான் அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும்.  அதிகாரிகளின் யோசனைகளை அரசு ஏற்கக் கூடாது. அதிகாரிகளின் யோசனைகளுக்கு  கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் செவி சாய்த்திருந்தால்  ஓமந்தூரார் ஆட்சியில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்காது; அறிஞர் அண்ணாவின் ஆட்சியில் அது நீட்டிக்கப்பட்டிருக்காது. காமராஜர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டமும், எம்.ஜி.ஆர் ஆட்சியில் சத்துணவுத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்காது.

சிறப்புப் பொதுவினியோகத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்ட காலத்தில் இருந்ததை விட இப்போது  துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இத்தகைய சூழலில் இத்திட்டத்தை விரிவுபடுத்துவது தான் மக்கள் நல அரசுக்கு  அழகாக இருக்குமே தவிர, குறுக்குவது சரியாக இருக்காது. 2021-ஆம் ஆண்டில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உளுந்து வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, அதை செயல்படுத்தாமல் இருக்கும் திட்டத்தையும் சீர்குலைக்க முயல்வது அழகல்ல.

மக்களின் குறைகளை அறிந்து அவற்றை போக்குவது தான் அரசின் கடமை ஆகும்.  அந்தக் கடமையை நிறைவேற்றும்  வகையில், துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தை இப்போதுள்ள நிலையிலேயே தொடர வேண்டும். ஏற்கனவே வாக்குறுதி அளித்தவாறு  உளுந்து வழங்கும் திட்டத்தையும் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.