தைத்திருநாளும், தமிழ் புத்தாண்டும் தமிழர்க்கு நன்மைகளை வழங்கட்டும்!

 
ramadoss

பாமக நிறுவனர் ராமதாஸ் பொங்கல் திருநாளையொட்டி தமிழ் பெருமக்களுக்கு வாழ்த்தினை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர்களின் உழவையும், உழைப்பையும் போற்றும் திருநாளான தைப்பொங்கல் விழாவையும் தமிழ் புத்தாண்டையும் கொண்டாடும் தமிழ்ச் சொந்தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

PMK

 ‘தமிழர் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்ற நாமக்கல் கவிஞரின் வார்த்தைகளுக்கேற்ப தமிழர்களின் பெருமைமிகு தனிச்சிறப்புகளில் ஒன்று தான் தைப்பொங்கல் திருநாள் ஆகும். அதனால் தான் இத்திருநாளுக்கு தமிழர் திருநாள் என்ற பெயர் உருவானது. அதுமட்டுமின்றி, மதங்களைக் கடந்த திருநாள் என்ற பெருமையும் பொங்கலுக்கு உண்டு. இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இத்திருநாளில் தமிழர்கள் வீடுகளில் தோரணம் கட்டி, புத்தாடை அணிந்து, புது நெல் குத்தி, புதுப் பானையில் பொங்கலிட்டு  மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள்.

தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. தமிழ்நாடு இப்போதும் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது. சமூக நீதி, கல்வி, வேளாண்மை, வேலைவாய்ப்பு  தொடர்பான நமது கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. தமிழ்ச் சொந்தங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்; அதற்காக நாம் சிந்திய வியர்வை ஒரு போதும் வீண் போகாது என்பதை தை பிறந்ததும் வரப்போகும் செய்திகள் அனைவருக்கும் உணர்த்தும்; நமது நம்பிக்கைகள் வெல்லும்.

PMK

தமிழர்களின் தனிச்சிறப்புகளில் ஒன்று அனைவரும் நலமாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என்று நினைப்பதும், வேண்டுவதும் தான். தைத் திங்கள் மற்றும் தமிழ்ப்புத்தாண்டின் வேண்டுதலும் அதுவாகத் தான் இருக்க முடியும். அதன்படியே அனைத்துத் தரப்பினரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும்; அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை  செழிக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில்  தைப்பொங்கல் திருநாளும், தமிழ்ப்புத்தாண்டும் அனைத்து நன்மைகளையும் வழங்கட்டும் என்று கூறி உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.