காவிரி அணைகளை கையாளும் அதிகாத்தை கர்நாடகத்திடமிருந்து பறிக்க வேண்டும்- ராமதாஸ்

 
 ராமதாஸ்

அணைகளில் தேவைக்கும் அதிகமாகவே  தண்ணீர் வைத்துள்ள கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நிலையில் உள்ள குறுவை பயிர்களைக் காக்க காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி தமிழகம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அறமும், மனசாட்சியும் இல்லாத கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அணைகளில் தேவைக்கும் அதிகமாகவே  தண்ணீர் வைத்துள்ள கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் 22&ஆம் நாள் வரை காவிரியில் தமிழ்நாட்டுக்கு 73.01 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 23 டி.எம்.சிக்கும் குறைவான தண்ணீரையே கர்நாடக அரசு வழங்கியிருக்கிறது. இன்று வரை 50 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டியுள்ள நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி, வினாடிக்கு 10,000 கன அடி என்ற அளவில் கர்நாடகம் தண்ணீர் திறந்து வருகிறது. இந்த நீர் தமிழ்நாட்டின் பாசனத் தேவைக்கு போதுமானதல்ல எனும் நிலையில், இந்த நீரையும் நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மனுத் தாக்கல் செய்துள்ளது.

என்.எல்.சிக்காக மீண்டும் மீண்டும் விளைநிலங்களைப் பறிப்பதா?.. மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும்! - ராமதாஸ் கண்டனம்..

மற்றொருபுறம், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதற்கு எதிரான மனநிலை நிலவுகிறது என்ற தோற்றத்தை உச்சநீதிமன்றத்திற்கு ஏற்படுத்தும் நோக்குடன் போராட்டங்களைத் தூண்டி விடுகிறது. தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என்பது தான் கர்நாடகத்தின் நோக்கம் ஆகும். மழை & வெள்ளக் காலங்களில் உபரி நீரை திறப்பதற்கான வடிகாலாக மட்டுமே தமிழகத்தை கர்நாடகம்  பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டுக்கு தேவையான காலத்தில் கர்நாடகம் ஒருபோதும் நீர் வழங்குவதில்லை.

தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தாலும் கூட, அந்த நீரை கொடுக்கும் இடத்தில் கர்நாடகமும், கெஞ்சிக் கெஞ்சி வாங்கும் இடத்தில் தமிழ்நாடும் இருக்கும் வரை காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பால் தமிழகத்திற்கு எந்த பயனும்  இல்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கும் அதிகாரம் கர்நாடக அரசிடமிருந்து   பறிக்கப்பட்டு, தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பிடம் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அதன் உண்மையான பொருளுடன் செயல்படுத்தப்படும் என்பது உறுதி.

காவிரி நடுவர் மன்றத்தின் விருப்பமும் அது தான். காவிரி நடுவர் மன்றம் கடந்த 05.02.2007&ஆம் நாள் அளித்த இறுதித் தீர்ப்பில்,‘‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். காவிரியின் குறுக்கே உள்ள அனைத்து அணைகளின் இயக்கத்தையும் மேற்பார்வையிடும் அதிகாரம், அணைகளின் நீர் திறப்பை ஒழுங்குமுறை குழுவின் உதவியுடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரம் ஆகியவை காவிரி மேலாண்மை வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டும்’’ என்று ஆணையிட்டிருந்தது. ஆனால், அதை அப்போது இருந்த மத்திய அரசும், அதற்கு பிறகு வந்த மத்திய அரசும் ஏற்றுக்கொள்ளாததால்  தான், அணைகளை கையாளும் அதிகாரம் இல்லாத காவிரி ஆணையத்தை அமைக்கும் திட்டத்திற்கு  கடந்த 2016&ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அதுதான் தமிழகத்திற்கு பின்னடைவானது.

காவிரி ஆறு

‘‘கடந்த கால வரலாறுகளில் இருந்து பார்க்கும் போது காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி  கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வில்லை என பெரும்பாலான ஆண்டுகளில் தமிழகம் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. அப்போதெல்லாம் போதிய அளவு மழை பெய்யாததால் தண்ணீர் திறக்க முடியவில்லை என கர்நாடகம் கூறியுள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது, எத்தகைய மேலாண்மை அமைப்பு அமைக்கப்பட்டாலும் அதற்கு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு தேவையான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும்’’ என்று நடுவர் மன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர். நடுவர் மன்றத்தின் ஐயம் சரியானது, கர்நாடகம் இன்னும் திருந்தவில்லை என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்துள்ளன. பழைய தவறுகள் இப்போதாவது திருத்தப்பட வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு  மாதிரியாக நடுவர் மன்றத்தால் கூறப்பட்டுள்ள பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் அனைத்து அதிகாரங்களையும் கொண்டதாக உள்ளது. இந்த வாரியம் தான் பக்ரா, நங்கல், பியாஸ் திட்டங்களின் அணைகளை இயக்கி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், இமாலய பிரதேசம், சண்டிகர், தில்லி ஆகிய 7 மாநிலங்களுக்கு நீரையும், மின்சாரத்தையும் வழங்கி வருகிறது. 55 ஆண்டுகளாக நடைமுறையில்  இருக்கும் இந்த அமைப்பு எந்த சிக்கலும் இல்லாமல் நீரையும், மின்சாரத்தையும் பகிர்ந்தளித்து வருகிறது. காவிரி நடுவர் மன்றம் 1991&ஆம் ஆண்டில் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பும், 2005&ஆம் ஆண்டில் வழங்கிய இறுதித் தீர்ப்பும் கர்நாடக அரசால்  ஓர் ஆண்டு கூட சரியாக செயல்படுத்தப்படவில்லை. அதனால் இப்போதைய அமைப்பு மாற்றப்பட வேண்டும்.

பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்திற்கு வழங்கப்பட்டிருப்பது போன்று, காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் இயக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு  மத்திய அரசு வழங்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.