170 கி.மீ. கட்டாயப்படுத்தி அழைத்து வருவதா? மாநாட்டை உடனே ரத்து செய்க- ராமதாஸ்

 
ramadoss

பெற்றோரைக் கொண்டாடுவோம்  என்ற பெயரில்  மாநாடு நடத்த வேண்டும் என்று எந்த பெற்றோரும் கோரிக்கை விடுக்கவில்லை என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ramadoss

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த திருப்பெயர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்றில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில்  நடைபெறவிருக்கும்  பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற பெயரிலான மாநாட்டுக்காக கடலூர், அரியலூர், பெரம்பலூர்,  மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,  திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் என்று அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அரசு அதன் விளம்பரத்திற்காக பெற்றோரையும், ஆசிரியர்களையும் அலைக்கழிப்பது கண்டிக்கத்தக்கது. அரசு பள்ளி மாணவர்களுக்கான திட்டங்கள் குறித்து பெற்றோருக்கு  விழிப்புணர்வு  ஏற்படுத்துவதாகக் கூறி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்கு  7 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு அரசு பள்ளியில் இருந்தும் குறைந்தது 50 பெற்றோர்களை அழைத்து வர வேண்டும்; அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து வர வேண்டும் என்று தலைமை ஆசிரியருக்கு  மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர்.  அதேபோல், தனியார் பள்ளிகளில் இருந்து குறைந்தது 20 பெற்றோரை அழைத்து வர வேண்டும் என்றும் வாய்மொழியாக ஆணையிடப்பட்டுள்ளது.

பெற்றோரை  விருத்தாசலத்திற்கு அழைத்து வருவதற்காக  தனியார் பள்ளிகள்  அவற்றிடம் உள்ள பேருந்துகளை இலவசமாக அனுப்பி வைக்க வேண்டும். விழா செலவுக்கு நன்கொடை வழங்க வேண்டும். பெரிய பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் நாளிதழ்களில் விளம்பரங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மண்டலத்தில் நடந்த  பெற்றோரைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி தோல்வி அடைந்து விட்டதாலும்,  இது தான் கடைசி மண்டல பெற்றோரைக் கொண்டாடுவோம் மாநாடு என்பதாலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை அழைத்து வர வேண்டும் என்று  கட்டாயப்படுத்தப்படுவதாக  ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பெற்றோரைக் கொண்டாடுவோம்  என்ற பெயரில்  மாநாடு நடத்த வேண்டும் என்று எந்த பெற்றோரும் கோரிக்கை விடுக்கவில்லை. பெற்றோர்களை சந்திக்க வேண்டும்  என்று முதலமைச்சரோ, அமைச்சர்களோ நினைத்தால் பள்ளிகள் தோறும் சென்று பெற்றோரை சந்திக்கலாம்.  அதை விடுத்து  7 மாவட்டங்களைச்  சேர்ந்த  பெற்றோரை விருத்தாசலத்திற்கு அழைத்து வருவது மனித உரிமை மீறல் ஆகும். மாநாடு நடைபெறும் இடத்திற்கும், திருவண்ணாமலை மாவட்டத்தின்  வடகோடி எல்லைக்கும் இடையிலான தொலைவு 170 கி.மீ ஆகும்.  மாநாடு காலை 8.30 மணிக்கு தொடங்கும் என்றும், பெற்றோர்கள் காலை 7 மணிக்குள் வந்து விட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. காலை 7 மணிக்கு விருத்தாசலம் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது அதிகாலை 3.00 மணிக்கு பெற்றோர்கள் புறப்பட வேண்டும். இந்தக் கொடுமைகளையெல்லாம் பெற்றோர் விரும்பாத நிலையில்  அவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வது  நியாயமல்ல.

ramadoss

பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாநாடு நடத்துவதன் பின்னணியில் புனிதமான நோக்கங்கள் எதுவும் இல்லை. விரைவில்  தேர்தல் வரவிருக்கும் நிலையில் பரப்புரைக்கான வாய்ப்பாகவே இந்த மாநாட்டை ஆளும்  திமுக பயன்படுத்திக் கொள்ளப்பார்க்கிறது. அதற்காக ஆசிரியர்களையும்,  பெற்றோரையும் அலைக்கழிப்பது  சரியல்ல. எனவே, விருத்தாசலத்தில்  வரும் 22-ஆம் தேதி நடத்தப்படவுள்ள  பெற்றோரைக் கொண்டாடுவோம்  மாநாட்டை ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக வட்ட அளவில் இந்த நிகழ்ச்சியை  நடத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.