அதே திரைக்கதை... அதே வசனம்...போலி விவரம் தந்து ஏமாற்றுவதா?- ராமதாஸ் கண்டனம்

 
ramadoss

அனைத்து சமூக பிரதிநிதித்துவ விவரம் கேட்டால், போலி விவரம் தந்து ஏமாற்றுவதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Fight for social justice in IIT-M has been going on unsuccessfully for 30  years, says Ramadoss - The Hindu

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம்  வழங்கப் பட்டிருக்கிறது என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட விவரங்களுக்கு, இரு மாதங்களுக்கு முன் இன்னொருவருக்கு வழங்கப்பட்ட அரைகுறையான, மோசடியான விவரங்களை வழங்கி திமுக அரசு ஏமாற்றியிருக்கிறது. ஆதாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லாமலேயே வன்னியர்களுக்கு 10.50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு விட்டது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த திமுக அரசு முயன்றது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. திமுக அரசின் சமூக நீதி மோசடி கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 1989-ஆம் ஆண்டு வரை ஒரே தொகுப்பாக பிணைக்கப்பட்டு அவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. எனது தலைமையில் வன்னியர் சங்கத்தினர்  பத்தாண்டுகளுக்கு தொடர்ந்து நடத்திய சமூகநீதிப் போராட்டத்தின் பயனாகவே 1989-ஆம் ஆண்டில்  202 சாதிகளைக் கொண்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50% இட ஒதுக்கீடு இரண்டாக பிரிக்கப்பட்டு, 107 சாதிகளைக் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டு, அதற்கு 20% இட ஒதுக்கீடும், மீதமுள்ள 95 பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 30% இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டன.

அதனால், தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டால் ஒவ்வொரு சமூகமும் எந்த அளவுக்கு பயனடைந்துள்ளது என்பதை அறிய வேண்டுமானால், 1989-ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலான 35 ஆண்டுகளில் ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்கள் சார்ந்த வகுப்பில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது? பொதுப்பிரிவில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது? என்ற விவரங்கள் தனித்தனியாக வெளியிடப் பட வேண்டும். இந்த விவரங்களை வெளியிட வேண்டும் என பல பத்தாண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வரும் போதிலும், சமூகநீதியில் தாங்கள் நடத்திய தில்லுமுல்லுகள் அம்பலமாகி விடும் என்பதற்காக தமிழகத்தை ஆட்சி செய்த எந்தக் கட்சியும் இந்த விவரங்களை வெளியிடாமல் மறைத்து வருகின்றன.

PMK to protest if Vanniyar reservation delayed, says Dr Ramadoss

இத்தகைய சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருப்பதாக ஒரு தகவலை தமிழக அரசு ஊடகங்களுக்கு கசிய விட்டது. அதில் எந்த புள்ளிவிவரமும் முழுமையாக இல்லை. வன்னியர்களைத் தவிர பிற சமூகங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களும் இல்லை. சில புள்ளி விவரங்கள் பத்தாண்டுகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், சில விவரங்கள் ஓராண்டுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்தன. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதை மடை மாற்றம் செய்யவே சில திரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை தமிழக அரசு திட்டமிட்டு வெளியிட்டது என்பதை அந்த விவரங்களை பார்த்த உடனேயே அறிய முடியும்.

தமிழக அரசு வெளியிட்ட அந்த புள்ளி விவரங்கள் திரிக்கப்பட்டவை; அரைகுறையானவை என்று குற்றஞ்சாட்டிய நான், அதை ஏற்க முடியாது என்றும், அனைத்து சமூகங்களுக்குமான பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன். இந்த நிலையில், கடலூரைச் சேர்ந்த எஸ்.பி.கோபிநாத் என்ற வழக்கறிஞர், தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை,  அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை, சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கை ஆகியவற்றிலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல் தொகுதி, இரண்டாம் தொகுதி, நான்காம் தொகுதி, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் ஆகியவற்றிலும் 1987-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு சமூகத்திற்கும் கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி வழங்கும்படி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்படோர் நலத்துறையிடம் விண்ணப்பித்திருந்தார்.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி ஒருவர் என்னென்ன விவரங்களைக் கேட்கிறார்? என்பதை முழுமையாக அறிந்து கொண்டு அவர் கேட்கும் தகவல்களை துல்லியமாக வழங்க வேண்டியது அரசுத் துறைகளின் கடமை ஆகும். ஆனால், வழக்கறிஞர் கோபிநாத் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்காத பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கடந்த ஆகஸ்ட் 3&ஆம் தேதி ஊடகங்களுக்கு கசிய விடப்பட்ட புள்ளி விவரங்கள் அடங்கிய கடிதத்தையே பதிலாக வழங்கியுள்ளது. இதன் மூலம் திராவிட மாடல் அரசு நடத்தி வரும் சமூகநீதி மோசடிகளும், தில்லுமுல்லுகளும் அப்பட்டமாக அம்பலமாகியிருக்கின்றன.

Tamil Nadu: Viral video shows Ramadoss threatening to hack journalists- The  Week

வழக்கறிஞர் கோபிநாத் எழுப்பிய வினாக்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை,  அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை, சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட 31 விழுக்காட்டில் எந்தெந்த சமூகங்களுக்கு எவ்வளவு விழுக்காடு கிடைத்துள்ளது? பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 30 விழுக்காட்டில், அந்தப் பிரிவில் உள்ள எந்தெந்த சமூகங்களுக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது? 20% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட  வகுப்பு சமூகங்களுக்கும், சீர் மரபினருக்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது? என்ற விவரங்களை சாதிவாரியாக வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அந்த விவரங்களை வெளியிடாத தமிழக அரசு, வன்னியர்களை ஏமாற்றுவதற்காக திரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களையே மீண்டும் வெளியிட்டிருக்கிறது. அதே திரைக்கதை, அதே வசனத்தை எழுதி மக்களை ஏமாற்ற மீண்டும் அதே நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட்டிருந்தால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்திற்கும் கிடைத்த பிரதிநிதித்துவத்தின் விவரங்களை தமிழக அரசு வெளியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. அரசு நினைத்தால் அந்த விவரங்களை ஒரு வாரத்தில் திரட்டி விட முடியும். ஆனால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து நிலைகளிலும் சமூகநீதி சூறையாடல்கள் நடப்பதால் தான் அவை குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட மறுக்கிறது என்று தான் சந்தேகிக்கத் தோன்றுகிறது. மடியில் கனமில்லை என்றால் திராவிட மாடல் அரசுக்கு வழியில் பயம் தேவையில்லை. சில சமூகங்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு அதிகமாகவும், வன்னியர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களுக்கு அவர்களின் மக்கள்தொகையை விட மிகவும் குறைவாகவும் பிரதிநிதித்துவம் இருப்பதால் தான் இந்த விவரங்களை தமிழக அரசு வெளியிட மறுக்கிறது என்பது  இதிலிருந்து உறுதியாகியுள்ளது.

வன்னிய மக்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, மீண்டும், மீண்டும் அந்த மக்களுக்கு துரோகங்களையும், சமூக அநீதியையும் தான் இழைத்து வருகிறது. அதனால் தான், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதை தடுக்கும் வகையில் பொய்யான, திரிக்கப்பட்ட, அரைகுறையான புள்ளி விவரங்களை வெளியிட்டு, ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுத்து அதுகுறித்து பத்தி பத்தியாக செய்தி வெளியிடச் செய்த தமிழக அரசு, அனைத்து சமூகங்களுக்குமான 35 ஆண்டுகால புள்ளி விவரங்களை வெளியிட மறுக்கிறது. தங்களின் சமூகநீதி முகத்திரை கிழிந்து விடும் என்று அஞ்சுகிறது.

உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. மாறாக, பொம்மையான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை கையில் வைத்துக் கொண்டு, திரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வன்னிய மக்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்றி விடலாம் என்று திமுக அரசு நினைத்தால், அதை அனைத்து நிலைகளிலும் ஆதாரங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தும். திராவிட மாடல் ஏமாற்று அரசு அணிந்திருக்கும் சமூகநீதி முகமூடியை கிழித்து அதன் சமூகநீதி மோசடிகளை அம்பலப்படுத்தும். மக்கள் மன்றத்தில் திமுகவின் சமூகஅநீதிகளை தோலுரித்து சரியான பாடம் புகட்டப்படுவதை உறுதி செய்யும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.