''நாளை நாங்கள் நடத்தும் போராட்டத்தால் சென்னையே குலுங்கும், முதல்வரே அழைப்பார்'' - ராமதாஸ்

 
ramadoss ramadoss

பாமக சார்பில் நாளை நடைபெறும் போராட்டத்தினால் சென்னையே குலுங்கும், அதிர்வலைகளை உருவாக்கும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும் வன்னியர்களுக்கு 10.5.% இட ஒதுக்கீடு தரக்கோரி,  பாமக நிறுவனர் இராமதாஸ் தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் தைலாபுரத்தில் இருந்து சென்னை வந்துள்ள மருத்துவர் ராமதாஸ் ஆழ்வார்பேட்டையில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ நாளை 38 மாவட்டங்களிலும் அமைதி வழி ஆர்ப்பாட்டம் பெரிய அளவில் நடைபெறுகிறது. நாளை நடைபெறும் போராட்டம் சென்னையை குலுங்க வைக்கும், அதிர்வலைகளை உருவாக்கும். அமைதி வழி போராட்டம் இல்லையென்றால் சிறை செல்வது போல் வேறு மாதிரியான போராட்டம் செய்வோம். அதெல்லாம் தேவையில்லை, நீங்கள் அமைதியாகவே போராட்டம் செய்யுங்கள் நான் 10.5 கொடுத்து விடுகிறேன் என்று தமிழக முதல்வர் ஆணையிடுவார் என்று எதிர்பார்க்கிறோம். தேர்தலுக்கு இன்னும் நான்கு முதல் ஆறு மாதத்தில் இருப்பதால் கிடைக்கலாம்” என்றார்.

பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் விருப்ப மனு வழங்குவது குறித்த கேள்விக்கும், தைலாபுரத்தை திமுக கைப்பற்றி விட்டது என்று அன்புமணி பேசியது குறித்த கேள்விக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலளிக்காமல் சென்றார்.