ஈகைத் திருநாள் - ராமதாஸ் , அன்புமணி வாழ்த்து!!

 
pmk

ரமலான் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு பாமக சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மனிதர்கள் அறநெறிகளை கடைப்பிடித்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் இரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  ‘‘நோன்பு பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்; தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்; யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!’ என்று இருமுறை கூறட்டும்; என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த இறைவன் மேல் ஆணையாக, நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாவிடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும். ‘எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார். அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஒரு நன்மை செய்வது அது போன்ற பத்து மடங்கு நன்மைகளை பெற்றுத் தரும்’’ என்று இறைதூதர் கூறியதாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ram

இரமலான் திருநாள் என்பது ஒரு கொண்டாட்டம் மட்டும் அல்ல. அது பாடம் கற்கும் காலம் ஆகும். மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பாடங்களும் நோன்புக்காலத்தில் இயல்பாகவே நோன்பாளர்களுக்கு கற்றுத்தரப்படுகின்றன. நோன்புக் காலத்தில் மற்றவர்களுக்கு உதவுதல்,  காலையில் உட்கொள்ளும் உணவையும், மாலையில் நோன்பு திறந்ததும் உட்கொள்ளும் உணவையும் அனைவரும் பகிர்ந்து உண்ணுதல், யாரிடமும் மோதலில் ஈடுபடாமல் இருத்தல், தீய வார்த்தைகளை பேசாமல் இருத்தல் ஆகியவை நோன்புக் காலத்தில் எவரும் கட்டாயப்படுத்தாமலேயே இஸ்லாமியர்கள் கற்றுக் கொள்ளும் பாடங்கள். அந்த வகையில் இரமலான் என்பது மனிதர்களை அனைத்து வகையிலும் பக்குவப்படுத்தும் ஓர் இனிய திருநாள் என்பதில் ஐயமில்லை.

இரமலான் கற்றுத் தரும் இந்த பாடங்களை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, அனைத்து மதத்தவரும் கடைபிடிக்க வேண்டும். அதை கடைபிடித்தால் உலகம் முழுவதும் மனிதம் தழைக்கும் என்பது உறுதி. அத்தகையதொரு  நிலை உருவாகவும், உலகம் முழுவதும்  வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க ஈகைத் திருநாள் கொண்டாடப்படும் இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

Ramadoss

அதேபோல் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈகையையும், கட்டுப்பாட்டையும் போதிக்கும் இரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த இரமலான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான இரமலான் மாதத்தில் தான் இறை தூதர் நபிகள் நாயகத்திற்கு குரான் வெளிப்படுத்தப்பட்டது என்பதால், அதைக் குறிக்கும் வகையில் தான் இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் பகல் நேரத்தில் நோன்பிருந்து நபிகளையும், குரானையும் போற்றுகின்றனர். இஸ்லாத்தின் புனிதமான 5 கடமைகளில் முக்கியமானது இரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை மேற்கொள்ளப்படும் நோன்பு ஆகும். இது பற்றி இறைவன் அவரது திருமறையில், மனித வாழ்க்கையில் அகமும், புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சிதான் நோன்பு என்று குறிப்பிடுகிறார். அகமும், புறமும் தூய்மையடைந்து விட்டால் மனிதர்கள் மகான்களாக மாறி விடுவார்கள். உலகிற்கும், தனி மனிதனுக்கும் பயனளிக்கக் கூடிய இத்தகைய மாற்றத்தை மனிதனிடம் ஏற்படுத்துவது தான் இரமலான் திருநாளாகும்.

anbumani


எந்த ஒரு மதத் திருநாளாக இருந்தாலும் அவை மகிழ்ச்சிக்கான கொண்டாட்டங்கள் என்பதைக் கடந்து வாழ்க்கை நெறிமுறைகளை போதிக்கும் நிகழ்வுகளாகவே அமைகின்றன. அதற்கு இரமலான் திருநாளும்  விலக்கல்ல. தூய்மையாக இருக்க வேண்டும்; நல்ல வார்த்தைகளையே பேச வேண்டும்; எதிரிகளையும் மன்னிக்க வேண்டும்; அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பாடங்களை இஸ்லாமிய சொந்தங்களுக்குக் கற்றுத் தருவது தான் இரமலான் திருநாளின் நோக்கம் ஆகும். இது போற்றத்தக்கதாகும். இந்த பாடங்களை உலகம் கற்றுக் கொள்ளாததால் தான் 21&ஆவது நூற்றாண்டிலும் போர்கள் நடத்தப் படுகின்றன. இன்றைய சூழலில் உலகின் முதன்மைத் தேவை அமைதியும், வளர்ச்சியும் தான். இதை  உணர்ந்து மக்களிடையே நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், நாட்டில் அமைதி, வளம் ஆகியவை அதிகரித்து மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் பாடுபட உறுதியேற்றுக் கொள்வோம்" என்று கூறியுள்ளார்.