கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி பாமக பிரமுகர் உயிரிழப்பு

 
பாமக கொடி

கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி பாமக பிரமுகர் உயிரிழந்த சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்சி கொடி கம்பத்தை நடும் பொழுது மின்சாரம் தாக்கி பாமக பிரமுகர்  உயிரிழப்பு..! – Kuttram Kuttrame

கடலூர் கே.என்.பேட்டையை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(40). கூலி தொழிலாளியான இவர், குமரப்ப நாயக்கன் பேட்டை பகுதியில் கிளை செயலாளராக பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து வருகிறார். இன்று மதியம் அதே பகுதியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக்கம்பத்தை புதுப்பிப்பதற்காக கழட்டி சென்று கொடிக்கம்பதற்கு புதியதாக வர்ணம் பூசி மீண்டும் அதனை அந்த இடத்தில் நடுவதற்காக கொண்டு வந்தார். பின்னர் கொடிகம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது கொடிக்கம்பத்தை நடுவதற்காக தூக்கிய போது, மேலே சென்ற மின் கம்பியில் கொடிக்கம்பம் உரசியதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதுபற்றி தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான சந்தோஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

anbumani

இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “கடலூர் கே.என்.பேட்டை பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் கிளைச் செயலாளர் சந்தோஷ்குமார், கட்சிக் கொடிக் கம்பத்தை புதுப்பித்து நடும் போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். சந்தோஷ்குமார் மிகவும் துடிப்பான இளைஞர். அர்ப்பணிப்பு உணர்வுடன் கட்சிப் பணியாற்றி வந்த அவரது மறைவை மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


சந்தோஷ்குமார் போன்றவர்கள் தான் கட்சியின் சொத்து.  அவர்களை  இழக்க நான் தயாராக இல்லை. கட்சிப் பணியாற்றுவதை விட பாட்டாளிகளின் பாதுகாப்பு தான் முக்கியம் ஆகும். எனவே, பாட்டாளி மக்கள் கட்யினர் கட்சிப் பணியாற்றும் போதும், சொந்தப் பணியாற்றும் போதும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.