முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் - அன்புமணி வேண்டுகோள்

 
anbumani

நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கடலூர் மாவட்ட பா.ம.க. சார்பில் நாளை மாவட்டம் முழுவதும் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள், வணிகர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  

இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடலூர் மாவட்ட உழவர்களின் நிலங்களை பறிக்கும் என்.எல்.சி நிறுவனத்தையும், அதற்கு துணையாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கடலூர் மாவட்ட பா.ம.க. சார்பில் நாளை (சனிக்கிழமை) கடலூர் மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இது என்.எல்.சி நிலம் எடுப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மட்டும் நடத்தப்படும் போராட்டம் அல்ல. அடுத்து வரும் ஆண்டுகளில் பொது மக்களின் வீடுகள், நிலங்கள் பறிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் நடத்தப்படும் போராட்டம் தான் இதுவாகும். 

anbumani

எனவே, நாளைய முழு அடைப்புப் போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அது தான் அப்பாவி உழவர்களின் விளைநிலங்களை அடக்குமுறையை ஏவி பறிக்கும் என்.எல்.சி மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் அத்துமீறலுக்கு முடிவு கட்டும். அதற்காக நாளைய முழு அடைப்பு போராட்டத்திற்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவச் செல்வங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேநேரத்தில் மருத்துவம், பால் உள்ளிட்ட இன்றியமையாத் தேவைகளுக்கும், 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கும் எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை போராட்டக்குழு உறுதி செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.