சிறு சலசலப்பு இருந்தது...இப்போது சரியாகிவிட்டது - ஜி.கே.மணி பேட்டி!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே சிறு சலசலப்பு இருந்தது. அது தற்போது சரியாகிவிட்டது என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
பாமகவில் உட்கட்சி விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி தானே தலைவர் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், பாமகவில் நடப்பது எங்களுடைய உட்கட்சி விவகாரம், எங்களுக்குள் நாங்கள் பேசிக்கொள்வோம். ஐயா ராமதாஸ் வழிகாட்டுதலுடன், அவருடைய கொள்கையை நிலைநாட்ட, பாமகவை ஒருக்கட்டத்தில் ஆளும்கட்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையாக அனைவரும் உழைப்போம் என்றார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, "மாமல்லபுரத்தில் மே 11ம் தேதி நடக்க உள்ள பாமக மாநாட்டில் ராமதாஸ், அன்புமணி இருவருமே கலந்துகொள்வர். இரண்டு தலைவர்களிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன். விரைவில் சுமுகம் ஏற்படும் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே சிறு சலசலப்பு இருந்தது. அது தற்போது சரியாகிவிட்டது. அனைத்துக் கட்சியிலும் சலசலப்பு என்பது சாதாரணம் என தெரிவித்தார்.