“திமுகவினர் இறந்தவர்களின் வாக்குகளை கூட செலுத்துவதில் வல்லவர்கள்”- பாமக பாலு
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி டிசம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தவிருப்பதாக பாமக வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை தலைவர் பாலு தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய பாலு, “வெற்றிகரமாக பாமக வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. வழக்கறிஞர்கள் பிரச்னை, நீதிமன்றத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆலோசனை செய்தோம். டிசம்பர் மாதம் சமூக நீதி பேரவை மாநில அளவிலான மாநாட்டை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி டிசம்பர் மாதம் 17ம் தேதி நடைபெற உள்ள பாமக சிறை நிரப்பும் போராட்டத்தை வெற்றி பெற செய்ய ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். பாரிமுனை சட்டக்கல்லூரி வளாகம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு நீதிமன்றமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் உச்ச நீதிமன்ற தென்பிராந்திய கிளையை தொடங்க வேண்டும். ஒன்றிய மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து திமுக அனைத்துக் கட்சி கூட்டம் என ஒன்றை நடத்தி வருகிறார்கள். இந்த கூட்டம் தேவையற்றது. அவர்கள் செய்கின்ற ஊழல் ஆகியவற்றை மறைக்கவே இதுபோன்ற செயல்களை அவர்கள் செய்து வருகின்றனர்.
கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடந்து வருகிறது. தமிழகத்திலும் சாதி வாரி கணக்கெடுப்பை தொடங்க வேண்டும் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு பிற்படுத்தப் பாட்டார் நல ஆணையம் எடுக்க தவறியதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் நவம்பர் மாதம் பிற்படுத்தப் பட்டோர் நல ஆணையத்தின் பதவிக்காலம் முடிவடையும் போதும், தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும். திமுகவினர் இறந்தவர்களின் வாக்குகளை கூட செலுத்துவதில் வல்லவர்கள். இறந்தவர்களின் வாக்குகள், வேறு ஊர்களுக்கு குடியேறியவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும்” என்றார்.


