"பாமக பொதுக்குழு என்ற பெயரில் இன்று நடைபெற்ற கூட்டம் சட்ட விரோதமானது"- கே.பாலு

 
s s

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என அன்புமணி ஆதரவாளர் வழக்கறிஞர் பாலு திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பாமக சமூக நீதி பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கம்/  Lawyer Balu removed from post of PMK Social Justice Peravai Chairman

விழுப்புரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இடததில் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதுடன் அன்புமணி தரப்பு மீதான நடவடிக்கை குறித்து 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு தயாரித்த அறிக்கை பாமக பொதுக்குழுவில் வாசிக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள அன்புமணி ஆதரவாளர் வழக்கறிஞர் பாலு , “பாமக  பொதுக்குழு என்ற பெயரில் இன்று நடைபெற்ற கூட்டம் சட்ட விரோதமானது. கட்சி சட்ட திட்ட விதிகளின்படி நடைபெறவில்லை. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் அன்புமணி தலைமையில் செயல்படும் பாமகவை கட்டுப்படுத்தாது. பாமக கட்சி விதிகளின்படி நிறுவனருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. பலரையும் கட்சியைவிட்டு நீக்குவதாக ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்புகள் எதுவும் செல்லாது. பாமக விதிகளின்படி தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், இணைத் தலைவர், இணைப் பொதுச்செயலாளர், அமைப்புச் செயலாளர், தலைமை நிலையச் செயலாளர் என்பதுதான் அதிகாரப் படிநிலை. அதிகாரம் மிக்க பொறுப்புகளின் தொடக்கமே தலைவர்தானே ஒழிய, கட்சி விதிகளின்படி நிறுவனருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. பா.ம.க-வின் பொதுச்செயலாளர் பொதுக்குழுவைக் கூட்டுவதும், கட்சித் தலைவர் தலைமை தாங்குவதும்தான் கட்சியின் பை-லா சொல்லும் விதி. இவை இரண்டும் இல்லாமல், எவராலும் பொதுக்குழு கூட்டம் நடத்த முடியாது” என்றார்.