பாமகவில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி எப்படி என்னை கட்சியிலிருந்து நீக்க முடியும்?- ஜி.கே.மணி
பாமகவில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி எப்படி என்னை கட்சியிலிருந்து நீக்க முடியும்? என பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையிலான மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், அந்த பதவியை தாமே எடுத்துக் கொள்வதாக அறிவித்தார். மேலும், பாமக செயல் தலைவராக தனது மகள் காந்திமதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால் கட்சிக்கு தலைவர் நான் தான் என அறிவித்துக்கொண்ட அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் பனையூரில் தனியாக அலுவலகம் அமைத்து ஆலோசனைகளை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இன்று காலை பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், ஜி.கே.மணி நீக்கப்படுவதாக அன்புமணி தரப்பு அறிவித்தது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, “என்னை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. பாமக என்றால் ராமதாஸ்தான் அடையாளம். 25 ஆண்டுகள் தலைவராக இருந்தேன். மனிதநேயமுள்ள, மனித பண்புள்ள மனிதருக்கு இதுபோன்ற சிந்தனை வருமா? அன்புமணியை கட்சிக்கு கொண்டு வந்ததே நான்தான். பாமகவில் அன்புமணி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அவர் எப்படி என்னை நீக்க முடியும்? எல்லா அதிகாரமும் ராமதாஸிடமே உண்டு. அன்புமணியை கட்சியைவிட்டு ராமதாஸ் நீக்கிவிட்ட நிலையில், பாமகவில் இல்லாத ஒருவர் என்னை எப்படி நீக்க முடியும்?


