"சேலத்தில் வரும் 29ம் தேதி திட்டமிட்டபடி பாமக பொதுக்குழு நடைபெறும்"- ஜி.கே.மணி
சேலத்தில் வரும் 29ம் தேதி பாமக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும். பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து ராமதாஸ் அறிவிப்பார் என பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணி தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, “மருத்துவர் ஐயா தலைமையில் 29ஆம் தேதி சேலம் மாநகரப் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் மாநில செயற்குழு கூட்டம், மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி இரு மாநிலத்தில் இருக்கிற எல்லா நிர்வாகிகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.இந்த கூட்டம் திட்டமிட்டபடி சரியாக நடக்கும். இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக ஐயா அறிவிப்பை வெளியிடுவார் என்று தமிழக அளவில் பார்க்கப்படுகிறது.
மருத்துவர் ஐயா தலைமையில் நடக்கும் போராட்டம் செல்லாது என்று சேலம் மாநகரம் காவல் ஆணையரிடம் புகார் கொடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் ஒரு சிலரை கையில் வைத்துக்கொண்டு ஒரு கடிதம் வாங்கிக்கொண்டு கட்சி எங்களிடம் இருப்பதாக வெளிக்காட்டி வருகிறார்கள். தேர்தல் ஆணையத்தின் மீது நாங்கள் வழக்கு தொடர்ந்தோம். அங்கு அன்புமணி தரப்புவேண்டிய அவசியம் இல்லை. வேட்புமனு பெறுவது போலியான நாடகம். மக்களை திசை திருப்பவும் கூட்டணி தொடர்பாக பேசுவதற்காக நடத்தப்படும் நாடகம். மருத்துவர் ஐயாவுக்கு பொதுக்குழு கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்று சொல்வது, ஐயாவுக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் தான் இந்த கட்சியை உருவாக்கியது. மிகப்பெரிய சக்தி. அவரை அவமானப் படுத்த, கட்சியை வேகமாக செயல்படுத்த ஐயா களம் இறங்கியுள்ளார். எல்லாத்தையும் ஊக்கப்படுத்தி வருகிறார். உற்சாகப்படுத்தி வருகிறார். அன்போடு கேட்டுக்கொள்கிறேன். எச்சரிக்கையுடன் சொல்கிறேன். மருத்துவர் ஐயாவை அவமானப்படுத்த வேண்டாம். அவர் வேதனைப்படுகிறார். கண் கலங்கினார். வேகமாக செயல்படுகிறார். கபல நாடகம் வேண்டாம். அதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நிறுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவர் ஐயாவின் கரம் வலுக்கும். பொதுக்கூட்டம் திட்டப்படி நடக்கும். கூட்டணி குறித்து அறிவிப்பார். வடமாநிலங்களில் கிறிஸ்துவ இடங்களை தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது. இது தவறு. எல்லோரும் நமது சகோதரர்கள் தான். கட்சி வளர்ச்சிக்காக மருத்துவர் அய்யாவும், அன்புமணியும் ஒன்று இணைந்த பிறகு, அன்புமணி கோரிக்கை படி மருத்துவர் ஐயா என்னை கட்சியை விட்டு வெளியேறி விடு என்று சொன்னால், அடுத்த நொடியே கட்சியை விட்டு விலகி விடுவேன்” என்று சத்தியம் செய்தார்.


