அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் தமிழ்வழி பாடப்பிரிவுகளை மூடுவதா? - ராமதாஸ் கண்டனம்

 
ramadoss

அண்ணா பல்கலைகழக உறுப்பு கல்லூரிகளின் தமிழ்வழி பாடப்பிரிவுகளை மூடக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்புக்கல்லூரிகளில் கட்டிடவியல் (சிவில்), இயந்திரவியல் (மெக்கானிகல்) உள்ளிட்ட பொறியியல் பாடப்பிரிவுகள் இடைக்காலமாக மூடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பொறியியல் படிப்புகளுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கு மாற்றாக, மாணவர் சேர்க்கை குறைந்ததை காரணம் காட்டி பொறியியல் பாடப்பிரிவுகளை மூடுவது பிற்போக்கான நடவடிக்கையாகும். தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் தேவையை கருத்தில் கொண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயிலாக மாநிலம் முழுவதும் 14 உறுப்புக்கல்லூரிகள் பல்வேறு காலகட்டங்களில் தொடங்கப்பட்டன. அவற்றில் திண்டுக்கல், பண்ருட்டி, நாகர்கோயில் ஆகிய மூன்று உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழியில்  நடத்தப்பட்டு வந்த கட்டிடவியல், இயந்திரவியல் ஆகிய இரு பாடப்பிரிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.அரியலூர், பட்டுக்கோட்டை உறுப்புக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு வழிகளிலும் நடத்தப்பட்டு வந்த கட்டிடவியல், இயந்திரவியல் பாடப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. இராமநாதபுரம், தூத்துக்குடி, திருக்குவளை ஆகிய உறுப்புக் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருவழிகளிலும் நடத்தப்பட்டு வந்த இயந்திரவியல் பாடப்பிரிவும், தமிழில் நடத்தப்பட்டு வந்த கட்டிடவியல் பாடப்பிரிவும் மூடப்பட்டுள்ளன. திருக்குவளை கல்லூரியில் ஆங்கிலவழியில் நடத்தப்பட்டு வந்த மின்னியல் மற்றும் மின்னணுவியல் பாடப் பிரிவும் மூடப்பட்டுள்ளது. 

ramadoss

ஆரணி, விழுப்புரம் ஆகிய உறுப்புக்கல்லூரிகளில் தமிழ் வழியில் நடத்தப்பட்டு வந்த இயந்திரவியல் பாடப்பிரிவும், திண்டிவனம் உறுப்புக்கல்லூரியில்  தமிழ் வழி கட்டிடவியல் பாடப்பிரிவும் மூடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 3 வகையான பாடப்பிரிவுகளில் 27 வகுப்புகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப் பிரிவுகளை மூடப் போவதாக கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே எனக்கு செய்தி கிடைத்தது. அதைத் தொடர்ந்து உறுப்புக் கல்லூரிகளில் தமிழ்வழி பாடப்பிரிவுகளை மூடக் கூடாது என்று வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 6&ஆம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து தமிழ்வழி பாடப்பிரிவுகள் மூடப்படாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் உறுதியளித்தார். ஆனால், 27 வகுப்புகளை மூடுவதற்கான சுற்றறிக்கையை அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடப்பிரிவுகள் மையத்தின் இயக்குனர் ஹோசிமின் திலகர், அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை இயக்குனருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதன்படி, ஜூலை மாதம் தொடங்கவுள்ள மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வில் மேற்குறிப்பிடப்பட்ட பாடப் பிரிவுகள் சேர்க்கப்படாது. தமிழ்வழி பாடப்பிரிவுகள் நீக்கப்படாது என்று அமைச்சர் வாக்குறுதி அளித்தும், அதற்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகம் செயல்படுவதை அனுமதிக்க முடியாது. அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அரசின் கீழ் செயல்படுகிறதா? அல்லது தன்னிச்சையாக செயல்படுகிறதா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். அண்ணா பல்கலை. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் கற்பிக்கப்பட்டு வந்த பாடப்பிரிவுகள் இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கு என்னனென்ன காரணங்கள் கூறப்பட்டாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்டிடவியல் மற்றும் இயந்திரவியல் பாடப்பிரிவில்  மாணவர் சேர்க்கை மிகப்பெரிய அளவில் குறைந்து விட்டதாகவும், பல்கலைக்கழகத்தின் நிதிநிலைமை மோசமடைந்து இருப்பதால், இந்த பாடப்பிரிவுகளை தொடர்ந்து நடத்த முடியாது என்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. கல்வி சார்ந்த செயல்பாடுகளில் வருவாய் சார்ந்து முடிவெடுக்க முடியாது. இயந்திரவியல், கட்டிடவியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு, உறுப்புக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அவற்றில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாதது தான் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு காரணம். அண்ணா பல்கலைக்கழகத்தில் இதே பாடப்பிரிவுகளில் சேருவதற்கு கடும்போட்டி நிலவும் நிலையில், உறுப்புக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் முன்வராததற்கு காரணம் இரண்டுக்கும் இடையிலான கட்டமைப்பு வசதி வேறுபாடுகள் தான். உறுப்புக்கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இணையாக மேம்படுத்துவதை பல்கலைக்கழகமும், இயந்திரவியல், கட்டிடவியல் பாடப்பிரிவுகளை பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசும் மேற்கொண்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக பாடப்பிரிவுகளை மூடுவது என்பது சவால்களை எதிர்கொள்வதற்கு அஞ்சி பின்வாங்கிச் செல்வதற்கு ஒப்பானது. இதில் தமிழக அரசு பின்வாங்கக்கூடாது; மாறாக சவாலை சந்திக்க வேண்டும். உறுப்புக் கல்லூரிகள் மூடப்படுவதால் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய இரு தரப்பினரும் பாதிக்கப்படுவர்.  

உறுப்புக் கல்லூரிகள் மூடப்படுவதால், அவற்றில் தற்காலிகமாக பணியாற்றி வந்த ஆசிரியர்கள் வேலை இழப்பார்கள். பத்தாண்டுகளுக்கும் கூடுதலாக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றியவர்களால் இப்போது வேறு கல்லூரிகளுக்கு சென்று பணியில் சேர முடியாது. அதனால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். அவர்கள் மட்டுமின்றி, உறுப்புக் கல்லூரிகளில் மிகக்குறைந்த கட்டணத்தில் கட்டிடவியல் அல்லது இயந்திரவியல் படிக்கும் வாய்ப்பையும் அக்கல்லூரிகள் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இழப்பர். இது உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தை பாதிக்கும்.எனவே, 11 உறுப்புக் கல்லூரிகளில்  கட்டிடவியல் மற்றும் இயந்திரவியல் பாடப்பிரிவுகளை மூடும் திட்டத்தைக் கைவிடும்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.