“அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்கும்” - வழக்கறிஞர் பாலு
அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்கும் என வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார்.
பாமகவில் தந்தை-மகன் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இருவர் தரப்பிலும் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ராமதாஸால் நியமிக்கப்பட்ட மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு கடந்த மே மாதம் 30ம் தேதியில் இருந்து அவர் தலைவராக செயல்பட்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்தால் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மற்றும் கட்சி நிர்வாக பொறுப்பு உள்ளிட்டவை கட்சியின் நிறுவனருக்கே உள்ளது என கடந்த ஜூலை ஏழாம் தேதி நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு , செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் திட்டமிட்டப்படி வரும் 9ம் தேதி மாமல்லபுரத்தில் கூட்டியுள்ள பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்கும் என வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார். பொதுக்குழுவுக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கை சட்டப்படி எதிர்க்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.


