பிரதமர் மோடியை சந்திக்கிறாரா ராமதாஸ்?- அருள் பரபரப்பு பேட்டி
தைலாபுரம் இல்லத்தில் பாமக மாவட்ட மாநில அணி நிர்வாகிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக கெளரவ தலைவர் ஜிகே மணி, செயல் தலைவர் காந்திமதி பொதுச்செயலாளர் முரளி சங்கர் இணை பொதுச்செயலாளர் அருள் எம் எல் ஏ உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், "சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் மருத்துவர் ராமதாசுக்கு கூட்டணி அமைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இருந்தாலும் கூட்டணி எந்த கட்சிகளுடன் அமைப்பது குறித்து நிர்வாகிகளிடம் இன்று கருத்து கேட்கப்பட்டது. மருத்துவர் ராமதாஸ் அமைக்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும். தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்கள் உள்ளன. திமுகவோ, அதிமுகவோ, தமிழக வெற்றிக்கழகமோ முழுமையாக கூட்டணி அமைக்கவில்லை. தங்களோடு விரும்புவர்களோடு கூட்டணி அமைப்போம். அது வெற்றி கூட்டணியாக இருக்கும். மூன்று, நான்கு நாட்களில் கூட்டணி அமைப்பார். பாரத பிரதமர் மோடியை சந்திப்பதில் என்ன தவறு உள்ளது? ஆனால் ராமதாஸ் மோடியை சந்திக்கவுள்ளாரா என்பது குறித்து எனக்கு தெரியாது
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரவுகளின் அடிப்படையில் தலைவராக அன்புமணிக்கு கடிதம் கொடுக்கபட்டது. அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றத்திலையே தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாம்பழம் சின்னத்திற்கு சொந்தக்காரர் ராமதாஸ் மட்டுமே அது தான் நீதி, நியாயம், தர்மம் அப்படி இல்லை என்றால் நீதி இல்லை, நியாயம் இல்லை. சசிகலா கட்சி ஆரம்பித்துள்ளதற்கு வாழ்த்துக்கள். யார் கட்சி ஆரம்பித்தாலும் வாழ்த்துக்கள் சொல்லனும். அது தான் தமிழர் பண்பாடு. மருத்துவர் ராமதாஸ் வாய்ப்பு கொடுத்தால் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடுவேன். எல்லா பக்கமும் மருத்துவர் ராமதாசுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென வேண்டுகோள் வைக்கின்றனர். மாம்பழ சின்னம் தங்களுக்கு தான் கிடைக்கும் அதில் எந்த மாற்றமும்மில்லை. அன்புமனியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை” எனக் கூறினார்.

