சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதிப் பிரச்னை - அன்புமணி ராமதாஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு சமூகநீதி பிரச்சனை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் அக்கட்சியினர் சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்தப்பட்டது. பாஜகவின் கரு.நாகராஜன், கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, புரட்சி பாரதம் கட்சியின் பூவை ஜெகன்மூர்த்தி, அமமுகவின் செந்தமிழன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், “சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு சமூகநீதி பிரச்சனை, இதன்மூலம் இட ஒதுக்கீடு வரும். சாதியை வைத்துதான் நூறாண்டுகளாக அடக்குமுறை நடந்தது. அதை சரிசெய்ய வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி கிடைக்க வேண்டும் என்று சாதிவாரி கணக்கெடுப்பு கோருகிறோம். சமூகத்தினர் எந்த நிலையில் இருக்கிறார்கள் என தெரிந்தால்தான் சமூகநீதியை நிலைநாட்ட முடியும். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளில் 35 முறை பிரதமர், முதலமைச்சரை நேரில் சந்தித்து, சட்டமன்ற கோரிக்கைகள், போராட்டங்கள், கருத்தரங்கங்கள் அறிக்கைகள் அளித்துள்ளோன். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் அடுத்த 50 ஆண்டுகளில் சமூக வளர்ச்சியை ஏற்படுத்தலாம்” என்றார்.


