தண்ணீர் தரவில்லை என்றால் மின்சாரம் தர முடியாது என சொல்லுங்கள்- அன்புமணி ராமதாஸ்

காவிரியில் தண்ணீர் திறந்து விட மாட்டோம் என்று கர்நாடகம் கூறிவரும் நிலையில், தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை கர்நாடகாவிற்கு வழங்க மாட்டோம் என்ற முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. முன்னதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி கடலூர் அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட மாட்டோம் என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் உச் நீதிமன்றம் உத்தரவு தந்தாலும் தண்ணீர் திறந்து விட மாட்டோம் என தெரிவித்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியதாகும். இறையாண்மைக்கு எதிரான செயலாகும். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. கர்நாடகா அரசு யாரையும் மதிக்கவில்லை. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடகாவில் இரண்டு முறை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த ஆறு மாதத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படவில்லை. மேலும் தமிழக முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து தமிழகத்தில் குருவை சாகுபடி பாதிக்கப்பட்டு இரண்டு லட்சம் ஏக்கர் கருகி வருகின்றது. தண்ணீர் இல்லாத விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு கர்நாடகா அரசுக்கு உடனடியாக அழுத்தம் தர வேண்டும். மேலும் காவேரி தண்ணீர் கர்நாடகாவில் உள்ளதால் தண்ணீர் தரமாட்டோம் என கர்நாடகா அரசு கூறியுள்ள நிலையில், தமிழகத்தில் கூடங்குளம், கல்பாக்கம், நெய்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதை தாங்கள் தரமாட்டோம் என கூறினால் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பதனை தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது பால் நெய் விலையை அரசு 5-வது முறையாக உயர்த்தியுள்ளது வன்மையாக கண்டிக்கின்றோம். இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்” என்றார்.