"குதிரை பேரத்தை விட மோசமானது" - அன்புமணி விமர்சனம்

 
"குதிரை பேரத்தை விட மோசமானது! - அன்புமணி விமர்சனம்

தமிழகத்தில் அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் இணைத்தது ஜனநாயக படுகொலை என்று புதுச்சேரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்தார்.

பாமக தலைவர் அன்புமணி புதுச்சேரியில் நிருபர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துள்ளது ஜனநாயக படுகொலை. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். மக்கள் விருப்பத்திற்கு எதிராக 4 அதிமுக எம்எல்ஏக்களை எந்த காரணமுமின்றி வெற்றி பெற்ற 20 நாட்களில் இணைந்துள்ளார். இது ஜனநாயக படுகொலை மட்டுமல்ல ஒரு மோசடி, தமிழக மக்கள் இதனை விரும்பவில்லை. இளைஞர்களுக்கு எதிரான செயல், இது குதிரை பேரத்தோடு மோசமானது. 20 நாட்களில்  ராஜினாமா செய்து உடனே இன்னொரு கட்சியில் சேர்வது நல்லதல்ல. மக்கள் தீர்ப்புக்கு எதிரான செயல். இடைத்தேர்தல் வந்தால் 4 வேட்பாளர்களும் படுதோல்வி அடைவார்கள். அனைத்து கட்சிகளும் சேர்ந்து பொது வேட்பாளர்கள் கூட நிறுத்துவோம்.

சமூக நீதிக்காக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக முதல் அமைச்சர் வீட்டிற்கு வந்த போது கோரிக்கை வைத்தேன். முதல் அமைச்சரின் முதல் வேலை இதுவாக இருக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பிற்கு டிஜிபி தலைமையில் குழு அமைக்க வேண்டும். போதை ஒழிப்புக்கு டிஜிபி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என முதல் அமைச்சருக்கு கோரிக்கை வைத்தேன். அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பை பாமக எதிர்க்கவில்லை.ஆதரிக்கவும் இல்லை. தமிழக முதல்வர் இட ஒதுக்கீடு, மதுபான கடைகள்,மணல் கொள்ளை போன்றவை கொடுத்த வாக்குறுதிகள்  பாமகவின் வாக்குறுதிகள். அதனால் வாக்கெடுப்பில் பாமக  நடுநிலை வகித்தது” என்றார்