மோகன் கைது- ‘இதுல உங்க வீரத்தை காட்டாதீங்க’... தமிழக அரசை சாடிய அன்புமணி
திரைப்பட இயக்குனர் மோகனை செய்யாத குற்றத்திற்காக கைது செய்வதா? உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஜி.மோகன் எந்த வித குற்றமும் செய்யாத நிலையில் சென்னை காசிமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதை காவல்துறை இதுவரை தெரிவிக்கவில்லை. எந்த ஒரு வழக்கிலும் ஒருவரை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் பல்வேறு வழிமுறைகளை வகுத்திருக்கும் நிலையில், அவை எதையும் கடைபிடிக்காமல், ஒரு தீவிரவாதியை பிடிப்பது போல மோகனை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் பஞ்சாமிர்தம் சில வாரங்களுக்கு முன் பெருமளவில் அழிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் எழுப்பப்பட்ட ஐயங்களைத் தான் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் இது தொடர்பான செய்திகள் பரவாமல் தடுக்கும் வகையில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தான் அவர் கூறியிருந்தார். இதில் எந்தத் தவறும் இல்லை. பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் அழிக்கப்பட்டதன் பின்னணி குறித்த முழு விவரங்களை அரசு வெளியிட்டிருந்தால் இந்த சிக்கலே எழுந்திருக்காது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயில் சிக்கல் தொடர்பாக சமயபுரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அங்கிருந்து தனிப்படை காவலர்கள் விரைந்து வந்து மோகனை கைது செய்திருப்பதன் பின்னணியில் திட்டமிட்டு பின்னப்பட்ட சதிவலை இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பவர்களை கைது செய்யாத தமிழக அரசு, கிளி ஜோசியர்களையும், சமூக ஊடகங்களில் பேசுபவர்களையும் கைது செய்து வீரத்தைக் காட்டக் கூடாது. இயக்குனர் மோகனை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.