"கொல்லப்பட்ட நடத்துநர் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவி" - அன்புமணி கோரிக்கை!!

 
pmk

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ரூ.50,000க்கு தனிநபர் காப்பீடு செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கிளையை சேர்ந்த அரசு பேருந்து சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. மதுராந்தகத்தில் குடிபோதையில் பேருந்தில் ஏறிய முருகன் என்ற பயணியிடம் நடத்துநர் பயணச்சீட்டு எடுக்க வலியுறுத்தி உள்ளார்.  அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பயணி நடத்துனரை தாக்கியுள்ளார்.  இதன் காரணமாக நடத்துனருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உடனடியாக அவர் மேல்மருவத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

tn

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,  நடத்துனர் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின்,  உயிரிழந்த அரசு பேருந்து நடத்துனர் குடும்பத்திற்கு உடனடியாக 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.




இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், "சென்னையிலிருந்து விழுப்புரம் சென்ற பேருந்தில் பயணச்சீட்டு எடுக்கும்படி கூறிய நடத்துனர் பெருமாளை போதையில் வந்த பயணி அடித்துக் கொலை செய்திருக்கிறார். கொல்லப்பட்ட நடத்துனரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். குடி குடிப்பவரின் குடும்பத்தை மட்டுமின்றி, மற்றவர்களின் குடும்பத்தையும் கெடுக்கும் என்பதற்கு இது தான் கொடிய உதாரணம் ஆகும். நெடுஞ்சாலைகளில் திறந்து வைக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் தான் இத்தகைய கொடுமைகளுக்கு காரணம் ஆகும். மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும்! கொல்லப்பட்ட நடத்துனர் பெருமாள் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மறைவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! மிகவும் ஆபத்தான பணி செய்யும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு இதுவரை தனிநபர் காப்பீடு இல்லை என்பது வருந்தத்தக்கது. அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான பணி செய்வதால், அவர்களுக்கு ரூ.50,000க்கு தனிநபர் காப்பீடு செய்ய வேண்டும்! " என்று கேட்டுக்கொண்டுள்ளார்.