மயிலாடுதுறை அருகே எண்ணெய்க் கிணறு அமைக்க அனுமதி தரக் கூடாது- அன்புமணி ராமதாஸ்
மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய்க் கிணறு அமைக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி தரக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மயிலாடுதுறை மாவட்டத்தையொட்டிய வங்கக்கடலில் 81 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 5 எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் & புரொடக்ஷன் நிறுவனம் விண்ணப்பித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி பாசன மாவட்டங்களின் சூழலைக் கெடுப்பதற்கான எந்தத் திட்டமாக இருந்தாலும் அவை முறியடிக்கப்பட வேண்டியவை தான்.
மயிலாடுதுறை மாவட்டத்தையொட்டிய கடல் பகுதியில் 1997-ஆம் ஆண்டில் எண்ணெய்க் கிணறுகளும், எரிவாயுக் கிணறுகளும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் அமைக்கப்பட்டன. பின்னாளில் ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் & புரொடக்ஷன் என்ற அமெரிக்க நிறுவனம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் இந்த எண்ணெய்க் கிணறுகளை பராமரித்து வந்தது. 2011-ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட இந்த எண்ணெய்க் கிணறுகளில் கடந்த ஆண்டு மீண்டும் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி தொடங்கப்பட்டது. அந்த எண்ணெய்க் கிணறுகளை விரிவாக்கம் செய்யும் நோக்குடன் கூடுதலாக 5 புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி அமெரிக்க நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.
வங்கக் கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் அமைக்கப்பட்டால் மீன்வளம் மிகக்கடுமையாக பாதிக்கப்படும்; ஏற்கனவே அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறுகளால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இப்போது கூடுதலாக எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் அந்தப் பகுதியில் மதிப்பிட முடியாத அளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பது மட்டுமின்றி, மீனவர்களின் வாழ்வாதாரமும் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.
ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் வேளாண்மையும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படக்கூடாது என்பதால் தான் மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களை காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி சாதித்தது. அதனால் இந்தப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முயல்கின்றன. இதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கவே கூடாது. அதுமட்டுமின்றி, அப்பகுதியில் ஏற்கனவே இயங்கி வரும் எண்ணெய்க் கிணறுகளையும் மூட ஆணையிட வேண்டும்.
ஒரு வேளை இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும் கூட, எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்படவுள்ள பகுதி தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் (Tamil Nadu Coastal Zone Management Authority) கட்டுப்பாட்டுக்குள் வருவதால் அதற்கு தமிழக அரசு மற்றும் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் அனுமதி கட்டாயம் ஆகும். இந்த அனுமதியை தமிழக அரசு வழங்கக் கூடாது.
இதேபோல், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் கண்டுபிடிப்பு நிறுவனம் சில மாதங்களுக்கு முன் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் அனுமதி விண்ணப்பித்தது. அதற்கு பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இதுவரை தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. அதே அணுகுமுறையைத் தான் எதிர்காலத்தில் இந்தத் திட்டத்திற்கும் தமிழக அரசு கடைபிடிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

