வடமாநிலக் கொள்ளையர்களின் அட்டகாசத்தை அரசு வேடிக்கை பார்ப்பதா?- பொங்கி எழுந்த அன்புமணி
சென்னை புறநகரில் இரு வாரங்களில் 3 ஏடிஎம் கொள்ளைகள் சம்பவம் நடைபெற்றுள்ளன. வட மாநிலக் கொள்ளையர்களின் அட்டகாசத்தை தடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பதா? என பாமக ்லதலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 3 இடங்களில் வங்கிகளின் ஏடிஎம்களை உடைத்தும், முழுமையாக கடத்திச் சென்றும் கொள்ளையடித்திருக்கிறார்கள். வட இந்தியக் கொள்ளையர்களின் தொடர் ஏடிஎம் கொள்ளைகள் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவற்றைத் தடுக்க காவல்துறை தவறியது கண்டிக்கத்தக்கது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள ஏடிஎம்மை இரு வாரங்களுக்கு முன் தகர்த்தக் கொள்ளையர்கள் அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.11.50 லட்சத்திற்கும் கூடுதலான பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அந்த பதட்டம் அடங்குவதற்கு முன்பாகவே குன்றத்தூர் - திருப்பெரும்புதூர் சாலையில் சோமங்கலம் என்ற இடத்தில் இன்னொரு வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்மை தகர்த்து அதிலிருந்த ரூ.10 லட்சத்திற்கும் கூடுதலான தொகையை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியை அடுத்தக் கூடப்பாக்கத்தில் உள்ள ஏடிஎம் எந்திரத்தை கொள்ளையர்கள் நேற்று முழுமையாக தூக்கிச் சென்றுள்ளனர்.
3 ஏடிஎம் கொள்ளைகளையும் இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் தான் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இரண்டாவது ஏடிஎம் கொள்ளையை நிகழ்த்திய கும்பலை கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி தெலுங்கானா - மராட்டிய எல்லையில் காவல்துறையின் சிறப்புப்படைகள் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்ற போது அந்த கும்பல் அவர்களிடமிருந்து தப்பி ஹரியானாவுக்கு ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது மூன்றாவது ஏடிஎம் கொள்ளையை நிகழ்த்தியவர்கள் யார்? ஏற்கனவே இரு கொள்ளைகள் நிகழ்ந்த நிலையில், ஏடிஎம்கள் மீதான கண்காணிப்பை வலுப்படுத்த காவல்துறை தவறியது ஏன்? இன்னொருபுறம் சென்னை பெசண்ட் நகரில் ஆளும் தவெகவின் நிர்வாகியும், கொலை உள்ளிட்ட குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டவருமான கண்ணன் என்பவர் ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்திருப்பதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொலை, கொள்ளைகளைத் தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. வட மாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்கள் எந்த அச்சமும் இல்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்து ஏடிஎம் கொள்ளைகளில் ஈடுபடுவதும், கொலைக்குற்றங்கள் அதிகரிப்பதும் ஆட்சியின் தோல்வியாகவே கருதப்படும். இத்தகைய குற்றங்கள் இனியும் நடக்காத வகையில் காவல்துறை கண்காணிப்பையும், உளவுத்துறையின் செயல்பாடுகளையும் வலுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

