“எல்லா அதிகாரங்களையும் ஆளுநரிடம் ஒப்படைக்க அரசு துடிப்பது ஏன்?” - அன்புமணி ராமதாஸ்
பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் செல்லுமா செல்லுமாதா? என்பதுதான் இப்போதைய சிக்கல் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடல்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 3ல் இருந்து 5ஆக உயர்த்த அரசு தீர்மானித்து இருப்பதாகவும், இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் விரைவில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படுவர் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். இது துணை வேந்தர்கள் நியமன நடைமுறையை மேலும் சிக்கலாக்கும் செயல். இன்றைய நிலையில் துணை வேந்தர்கள் நியமனத்திற்கு தடையாக இருப்பது தேடல்குழுவில் மூவர் இருக்க வேண்டுமா, நால்வர் இருக்க வேண்டுமா அல்லது ஐவர் இருக்க வேண்டுமா? என்பது இல்லை. இந்த சிக்கல் அதையெல்லாம் கடந்து வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. திமுக ஆட்சியில் இது தொடர்பாக அரசுக்கும், ஆளுநருக்கு மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தான் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. இப்போதைய சிக்கல் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கி சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்ட சட்டங்கள் செல்லுமா, செல்லாதா? என்பது தான்
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் இறுதி விசாரணை வரும் 29&ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கவுள்ளது. அந்த வழக்கில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதால், அத்துடன் இந்த சிக்கலுக்கு தீர்வு ஏற்பட்டு விடும். இத்தகைய சூழலில் இந்த விவகாரத்தை இரு ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைக்கு இழுத்துச் சென்று, எல்லா அதிகாரங்களையும் ஆளுநரிடம் ஒப்படைக்க அரசு துடிப்பது ஏன்?வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைப்பதைப் போல இந்த சிக்கலுக்கு விரையில் சட்டத் தீர்வு கிடைக்கவுள்ள நிலையில், புதிய சிக்கலை ஏற்படுத்தி விடக் கூடாது. எனவே, துணைவேந்தர்கள் தேடல் குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள வழக்கைத் திறம்பட நடத்தி, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் தமிழ்நாடு அரசின் உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

