மானாமதுரை காவலர்கள் தாக்கி விசாரணை கைதி சாவு! திமுக ஆட்சியில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லையா?- அன்புமணி
மானாமதுரை காவலர்கள் தாக்கி விசாரணைக் கைதி சாவு, ஐந்தாண்டுகளில் 27-ஆம் லாக்கப் மரணம்.... திமுக ஆட்சியில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லையா? என பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில், “சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல்நிலைய காவலர்களால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் என்ற கைது விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். மனித உயிர்களும், மனித உரிமைகளுக்கும் கிஞ்சிற்றும் மதிப்பளிக்காமல் திமுக அரசும், காவல்துறையும் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது ஆகும். மானாமதுரையில் கடந்த 6-ஆம் தேதி இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் ஆகாஷ் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். அடுத்த சில மணி நேரங்களில் கால் முறிந்த நிலையில் ஆகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், வழக்கம்போலவே காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பி ஓடும் போது பாலத்திலிருந்து விழுந்து கால் முறிந்து விட்டதாக காவல்துறை கூறியது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லும் போது நன்றாக இருந்த ஆகாசுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக காவல்துறை சார்பில் கதை எழுதப்படுகிறது. ஆனால், ஆகாஷ் கைது செய்யப்பட்டது முதல் உயிரிழக்கும் வரை காவல் நிலையத்திற்கே அழைத்துச் செல்லப்படவில்லை என்றும், அவரை ரகசிய இடத்தில் வைத்து கொடுமைப்படுத்தி காவல்துறையினர் படுகொலை செய்து விட்டதாகவும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். காவல்துறையினருக்கு எதிராக ஆகாஷ் உறவினர்கள் நடத்தும் சாலை மறியல் போராட்டத்தால் மதுரை - இராமேஸ்வரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கத் திறனற்ற அரசும், காவல்துறையும் அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடம் ஏற்படும் போதெல்லாம் அதை திசை திருப்புவதற்காக கைதிகளை சுட்டுக்கொல்வது, காலை முறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. வழக்குகளை முறையாக விசாரித்து தண்டனை பெற்றுத் தருவதற்கு பதிலாக கைதிகளை சித்திரவதை செய்து கொலை செய்யும் போக்கு திமுக ஆட்சியில் அதிகரித்து வருகிறது.கடந்த ஆண்டில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில் மடப்புரம் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், இப்போது மானாமதுரையில் ஆகாஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் மட்டும் இதுவரை 27 காவல்நிலையச் சாவுகள் நடந்துள்ளன. திமுக ஆட்சியில் மனித உயிர்களுக்கும், மனித உரிமைகளுக்கும் மரியாதை இல்லை என்பதையே இது காட்டுகிறது. ஆகாஷ் சித்திரவதைக் கொலைக்கு காரணமான காவல்துறையினர் அனைவரும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். ஆகாஷ் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்” என்றார்.

