சமூகநீதி என்ற சொல்லை உச்சரிப்பதற்கே ஸ்டாலினுக்கு தகுதி இல்லை- அன்புமணி ராமதாஸ்

 
anbumani anbumani

சமூக அநீதியின் அடையாளம் திமுக அரசு. சமூகநீதி என்ற சொல்லை உச்சரிப்பதற்கே முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

PMK dispute: Anbumani bloc says it got ECI recognition

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூகநீதிக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடப்போவதாகவும், அதற்கான சக்தி  தமக்கு இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  கூறியிருக்கிறார். சமூகநீதிக்கு எந்த அளவுக்கு முடியுமோ, அதை விட அதிகமாகவே துரோகம்  செய்து விட்டு, சமூகநீதியைக் காப்பதற்காகவே அவதாரம் எடுத்தவரைப் போலவும், சமூக அநீதிக்கு  எதிராக நிற்கப்போவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொருந்தாத வசனங்களைப் பேசுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த  வேண்டும் என்பது சமூகநீதியில் அக்கறை கொண்ட அனைவரின் ஒட்டுமொத்த கோரிக்கை.  ஆனால், ஆயிரமாயிரம் முறை வலியுறுத்தியும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களும் தீர்ப்பளித்த பிறகும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி  சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மறுத்தவர் மு.க.ஸ்டாலின்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1388 நாள்களாகியும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு  திமுக அரசு மறுத்து வருகிறது. சமூகநீதி வழங்கும் விஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே மதிக்காக திமுக அரசுக்கு சமூகநீதி பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை. பட்டியலின மக்களுக்கு உள் இட இதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. ஆந்திரம், தெலுங்கானம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது மட்டுமின்றி, இட ஒதுக்கீட்டின் அளவையும் அதிகரித்திருக்கின்றன.  ஆனால், திமுக அரசு மட்டும் இந்த விஷயத்தில் கண், காது, வாய் உள்ளிட்ட அனைத்தையும் மூடிக் கொண்டிருக்கிறது. எந்த வகையில் பார்த்தாலும் சமூக அநீதியின் அடையாளம் திமுக அரசு தான். சமூகநீதி என்ற உன்னத சொல்லை உச்சரிப்பதற்கான தகுதியை  மு.க.ஸ்டாலின் அரசு எப்போதோ இழந்து விட்டது. சமூகநீதிக்கு இழைத்த துரோகங்களுக்காகவும்,  மக்களுக்கு சமூகநீதி வழங்கத் தவறியதற்காகவும் வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் கடுமையான தண்டனை அளிப்பார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.