6வது இடம்... திமுக ஊழலால் தமிழகம் வர முதலீட்டாளர்கள் அச்சம்- அன்புமணி ராமதாஸ்

 
anbumani anbumani

முதலீட்டு உறுதிமொழிகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு ஆறாம் இடம். திமுக ஊழலால் தமிழகம் வர முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

anbumani

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் திசம்பர் மாதம் வரையிலான 9 மாதங்களில் அரசு மற்றும் தனியார் முதலீடுகளுக்கான உறுதிமொழிகளை  ஈர்ப்பதில் முதல் 5 மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெறவில்லை. இந்தப் பட்டியலில்  ஆந்திரம் 25.30%  முதலீட்டு  உறுதிமொழிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு வெறும் 4.9%  முதலீட்டு உறுதிமொழிகளுடன் ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டதையே  இது காட்டுகிறது. 2025-26ஆம் நிதியாண்டின் முதல் 3 காலண்டுகளில் அரசுத்துறை சார்பில் மொத்தம் ரூ.2.75 கோடி, தனியார் துறை சார்பில் ரூ.23.87 லட்சம் கோடி என மொத்தம் ரூ.26.62 லட்சம் கோடிக்கான முதலீட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.  இந்த முதலீடுகள்  அடுத்து வரும் பல ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் செய்யப்படும். ஒவ்வொரு மாநிலமும் எந்த அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கின்றனவோ, அந்த அளவுக்கு அம்மாநிலத்தில் முதலீட்டுக்கு சாதகமான சூழல் நிலவுவதாக பொருள் ஆகும்.

அந்த வகையில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஆந்திர மாநிலம்  25.30%  முதலீட்டு அறிவிப்புகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில்   அறிவிக்கப்பட்ட முதலீடுகளை விட ரூ.2.74 லட்சம் கோடி முதலீடுகளை கூடுதலாக ஈர்த்திருக்கிறது. ஆந்திரத்தைத்  தொடர்ந்து ஒதிஷா 13.10%, மராட்டியம் 12.80%, தெலுங்கானா 9.50%,  குஜராத்  7.10%  முதலீட்டு அறிவிப்புகளை ஈர்த்ததன் மூலம் அடுத்த 4 இடங்களைப் பிடித்திருக்கின்றன. தமிழ்நாட்டால் ஆறாம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்திருக்கிறது. இந்தியாவின்  ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்திக்கு  தமிழ்நாடு 9 முதல் 10% பங்களிப்பு செய்கிறது. அதன்படி பார்த்தால் ஒட்டுமொத்த முதலீட்டு அறிவிப்புகளில் சுமார் 10 விழுக்காட்டை தமிழகம் ஈர்த்திருந்தால் தமிழகத்தில் முதலீட்டுச் சூழல் சரியாக உள்ளதாக புரிந்து கொள்ள முடியும். ஆனால், தமிழகத்திற்கு இயல்பாகக் கிடைக்கக்கூடிய முதலீட்டில் பாதியளவுக்கு மட்டும் தான் கிடைத்திருக்கிறது என்பதிலிருந்தே  தமிழ்நாட்டின் முதலீட்டுச் சூழல் எப்படி உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

Ungaludan Stalin - Anbumani Ramadoss

தமிழ்நாட்டில் ரூ.1,720 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த Hwaseung Enterprise நிறுவனம் கடந்த நவம்பர் மாதம்  அதை ரத்து செய்து விட்டு, ஆந்திராவில் தொழிற்சாலை அமைக்க முதலீடு செய்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில்   ரூ.8,000 கோடி மதிப்பில் முதலீடு செய்யவிருந்த  குளிரூட்டி நிறுவனங்களும் ஆந்திராவுக்கு சென்று விட்டன.  அவற்றின் தொடர்ச்சியாக இப்போதும்  முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரம், தெலுங்கானம் ஆகிய மாநிலங்களிடம் தமிழ்நாடு படுதோல்வி அடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் முதலீடு  செய்ய வேண்டும் என்று ஏதேனும் நிறுவனங்கள் விரும்பினால், மொத்த முதலீட்டில் கணிசமான பகுதியை  ஆட்சியாளர்களுக்கு கையூட்டாக தர வேண்டியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டுக்கு வர முதலீட்டாளர்கள்  அஞ்சுவதற்கு இது தான் காரணம்.  தமிழ்நாட்டின் மீது  திமுக அரசால் படரவிடப்பட்டுள்ள முதலீட்டை மறைக்கும் மேகங்கள் இனி படிப்படியாக விலகத் தொடங்கும். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு  முதலீட்டை ஈர்ப்பதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை ஈர்க்க பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.