இதெல்லாம் கவுரவ பிரச்சனையா? தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி

 
அன்புமணி ராமதாஸ்

சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வருவதை கவுரவப் பிரச்சினையாக தமிழக அரசு கருதக் கூடாது என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வருவாய்த்துறை சார்பில்  வழங்கப்படும்  சாதி சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ் உள்ளிட்ட 26 வகையான சான்றிதழ்கள் மற்றும்  பட்டா மாறுதல் கோரும் மனுக்கள் மீது அதிகபட்சமாக 16 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று  வருவாய்த்துறை பணியாளர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ஆணையிட்டிருக்கிறார். தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அத்தியாவசியச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அடிப்படைச் சேவைகளை பெறுவதற்கு குறைந்தது ரூ.500 முதல் ரூ.10,000 வரை கையூட்டாக வழங்க வேண்டியிருப்பதாகவும், கையூட்டு கொடுத்தாலும் கூட குறித்த காலத்தில் சான்றிதழ்கள் கிடைப்பதில்லை என்றும் பொதுமக்கள்  குற்றஞ்சாட்டுவதாகவும், இதற்குத் தீர்வு காண பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் என்றும் கடந்த 19-ஆம் தேதியும்,  23-ஆம் தேதியும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து தான் மக்களுக்கான சேவைகள் குறித்த காலத்தில் வழங்கப்பட வேண்டும்  என்று அரசு அறிவித்துள்ளது.  பா.ம.க.வின் கோரிக்கைக்கு பயன் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.

பொதுமக்களுக்கான சேவைகள் 16 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்று  சுற்றறிக்கை அனுப்பியுள்ள தமிழக அரசு, அதையே பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டமாக இயற்றுவதற்கு என்ன தடை?  என்பது தான் பா.ம.க.வின்  வினா. இதை கவுரவப் பிரச்சினையாக  அரசு பார்க்கக் கூடாது. பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கமும்,  தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் நோக்கமும் ஒன்று தான். ஆனால், இரண்டும் செயல்படுத்தப்படும் முறையில் பல வேறுபாடுகள் உள்ளன.

அன்புமணி

தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையரால் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின் தன்மை பரிந்துரை வடிவிலானது.  அதை அனைத்து அதிகாரிகளும் செயல்படுத்த வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது.  16 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு சேவை வழங்கப்பாவில்லை என்றால் அதற்காக யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது.  ஆனால், பொதுச்சேவை பெறும் உரிமைச்சட்டம் அப்படிப்பட்டதல்ல.

பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தின்படி , சாதிச்சான்றிதழ், பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். குறித்த காலத்தில் அரசின் சேவை கிடைக்காத மக்களுக்கு ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கவும், சேவை வழங்காத அதிகாரிக்கு தண்டம் விதிக்கவும் சட்டத்தில் வகை செய்யப்படும். அதனால், அரசு அதிகாரிகள் குறித்த நேரத்தில் சேவை வழங்குவார்கள். இது தான் மக்களுக்குத் தேவை.

வருவாய்த்துறை சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய  சேவைகள் 16 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்ததன் மூலம் மக்களுக்கு குறித்த காலத்தில் சேவை வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை அரசு வெளிப்படுத்தியுள்ளது.  இதன் அடுத்தக்கட்டமாக  பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி பொதுமக்களுக்கு குறித்த காலத்தில் சேவை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.