சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது- அன்புமணி ராமதாஸ்

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது, கண்டிக்கத்தக்கது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வருபவர் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர். யூடியூபில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், இவருக்கு எதிராக சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஜாமின் பெற்று வெளியே வந்த இவர், தொடர்ந்து யூடியூபில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ பதிவிட்டுவருகிறார். தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி இவர் வீட்டின் மீது நேற்று (மார்ச் 24) காலை தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார்.
சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; கண்டிக்கத்தக்கது!
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) March 25, 2025
சென்னையில் யு டியூபர் சவுக்கு சங்கரின் இல்லம் தூய்மைப்பணியாளர்கள் போர்வையில் வந்தவர்களால் அருவருக்கத்தக்க வகையில் தாக்கப்பட்டிருப்பதும், அவரது வயது முதிர்ந்த தாயார் அச்சுறுத்தலுக்கு…
இச்சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில், “சென்னையில் யு டியூபர் சவுக்கு சங்கரின் இல்லம் தூய்மைப்பணியாளர்கள் போர்வையில் வந்தவர்களால் அருவருக்கத்தக்க வகையில் தாக்கப்பட்டிருப்பதும், அவரது வயது முதிர்ந்த தாயார் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதும் கடுமையான கண்டிக்கத்தக்கவை. ஜனநாயகத்தில் இத்தகைய செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களும், இதற்கு பின்னணியில் உள்ளவர்களும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.