உடனடியாக தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

பிகாரில் இட ஒதுக்கீட்டின் அளவை 65% ஆக உயர்த்தும் நிதிஷ்குமார் அரசின் நடவடிக்கை பாராட்டத் தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை வெளியிட்டு பிற மாநில முதலமைச்சர்களுக்கு முன்னோடியாக உருவெடுத்த அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், இப்போது அடுத்தக்கட்டமாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் பிகார் மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டில் இருந்து 65% ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதன் மூலம் சமூகநீதியின் உச்சத்தை நோக்கிய பயணத்தில், தமது மாநிலத்தை மேலும் சில படிகள் உயர்த்தியிருக்கிறார். அவருக்கு எனது பாராட்டுகள்.
பிகார் மாநிலத்தில் சாதி அடிப்படையிலான 50% இட ஒதுக்கீடும், பொருளாதார அடிப்படையிலான 10% இட ஒதுக்கீடும் இப்போது நடைமுறையில் உள்ள நிலையில், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு 65% ஆக உயர்த்தப்பட்டால், மொத்த ஒதுக்கீடு 75% ஆக அதிகரிக்கும். அதன் மூலம் இந்தியாவில் அதிக விழுக்காடு இட ஒதுக்கீடு கொண்ட மாநிலமாக பிகார் உருவெடுக்கும். பிகார் அரசின் இந்த முயற்சியும் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமுகநீதியை நோக்கிய துணிச்சலான பயணத்தில் பிகாருடன் தமிழ்நாடும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். உடனடியாக தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், அருந்ததியர், பழங்குடியினர் ஆகிய அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இத்தகைய முயற்சியை மேற்கொண்டால், அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து வகைகளிலும் துணை நிற்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.