“ராமதாஸ் உடன் 40 முறைக்கு மேல் நான் பேசி விட்டேன்”- அன்புமணி
உங்களது விருப்பப்படி கூட்டணி அமையும் 60 எம்எல்ஏக்கள்கிடைத்துவிட்டால் பாமக ஆட்சிதான் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், “ராமதாஸ் ஒரு தேசிய தலைவர். ஆறு இட ஒதுக்கீடுகளை பெற்று தந்தவர். நான் ஒன்றும் பிடிவாதக்காரன் அல்ல, பதவி மீது ஆசை எதும் இல்லை. எவ்வளவோ வலிகளை தாங்கி கொண்டிருக்கிறேன். தூங்கி பல நாட்கள் ஆகிவிட்டது. நேற்று பொதுக்குழு நடத்த தடையில்லை என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேட்டபோது எனக்கு அது மகிழ்ச்சியை தரவில்லை. மனதில் வலியுடன்தான் அந்த தீர்ப்பை எதிர்கொண்டேன். இது ஒன்றும் வெற்றி கிடைக்காது. சுயநலவாதிகள் சம்பாதிப்பதற்கு பல வகையில் செயல்படுகின்றனர். அதனைவிட முடியாது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தரவில்லை என்றால் கடுமையான சிறை நிரப்பும் போராட்டம் நடக்கும்.
தேர்தலில் நமக்கு 30-40 எம்.எல்.ஏக்கள் இருந்தாலே நம்முடைய ஆட்சிதான். 5 ஆண்டுகளுக்கு முன் ஐயா கேட்டிருந்தால் நான் யோசிக்காமல் பதவியை கொடுத்திருப்பேன். உங்களது விருப்பப்படி கூட்டணி அமையும் 60 எம்எல்ஏக்கள் கிடைத்துவிட்டால் பாமக ஆட்சிதான். மெகா கூட்டணி அமைத்து, யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை முடிவு செய்வோம். தாழ்த்தப்பட்டவர்கள், பின்தங்கியவர்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்பது என் DNA-விலேயே இருக்கிறது. ராமதாசுடன் சமாதான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது . ஒருமுறை இரண்டு முறை கிடையாது, 40 முறைக்கு மேல் நான் பேசி விட்டேன். காலையில் ராமதாஸ் சரி என்பார், பூசாரிகள்தான் கெடுத்து விடுகிறார்கள். இரண்டு பேரும் சேர்ந்து கையெழுத்திடும் அதிகாரத்தை வைத்து கொள்வோம் என பேசினோம்” என்றார்.

