ஆகாயத்தில் இருந்து உணவு வருமா? பிச்சை எடுக்கப் போறீங்களா?- அன்புமணி ராமதாஸ்

 
ச்

திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செங்கம் அருகே உள்ள முறையாறு பகுதியில் புதிதாக அமைத்துள்ள சுங்கச்சாவடியில் நேற்று பாமகவின் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மாநில மாநாடு  நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வெளி மாவட்டங்களான  கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் பல பகுதிகளிலிருந்து பாமகவினர் கலந்து கொண்டனர். 

Image

மாநாட்டில் உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழக விவசாயிகளுக்கு இலவசமோ, பிச்சையோ போட வேண்டாம். விளைபொருட்களுக்கு உரிய விலை கொடுத்தாலே போதும். முப்போகம் விளையும் விவசாய நிலங்களை தொழிற்சாலைகளாக மாற்ற துடிக்கும் எ.வ.வேலு கிடையாது. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் முதல்வர், என்.எல்.சி விரிவாக்கத்திற்கு எதிராக ஏன் குரல் கொடுக்கவில்லை. விளைநிலங்களை எல்லாம் அழித்துவிட்டு தாய்லாந்து, சீனா, ஜப்பானிடம் உணவுக்கு பிச்சை எடுக்கப் போகிறீர்களா? விளைநிலங்களில் தொழிற்சாலையை அமைத்துவிட்டு உணவுக்கு என்ன செய்வீர்கள்? ஆகாயத்தில் இருந்து உணவு வருமா? மக்கள் போராடுவதால் தொழிற்சாலையை கொண்டு ஆகாயத்தில் அமைக்க முடியுமா? என ஒரு அமைச்சர் கேட்கிறார். அவர் அமைச்சர் இல்லை, அவர் ஒரு வியாபாரி.


பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும் திருப்போரூர் அருகே 5000 ஏக்கர் பரப்பளவில் உப்பளம் உள்ள பகுதியில் விமான நிலையம் அமைக்க வேண்டும். விவசாயிகளின் 10 அம்சக் கோரிக்கைகள வலியுறுத்தி சென்னை போர் நினைவுச்சின்னம் அருகே பாமக சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெறும். விரைவில் தேதி அறிவிக்கப்படும். வெள்ளைக்காரன் ஆட்சியில்கூட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடவில்லை. விவசாயிகள் மீது குண்டர் சட்டம்போட்ட கொடுங்கோல் ஆட்சி தற்போதுள்ள ஆட்சி” என சாடினார்.