நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி?- அன்புமணி ராமதாஸ் பதில்

 
அன்புமணி ராமதாஸ்

கோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும் என்றும் வேறு எதாவது அமைத்தால் எதிர்ப்போம் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  தெரிவித்துள்ளார்.

Image

திண்டிவனத்திலுள்ள தைலாபுரத்தில் பாமகவின் 2024- 25 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதி நிலை நிழல் அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ், அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டனர். அதன் பின் பேட்டியளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழக அரசு வேளாண்துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். கடந்த ஆண்டு தமிழக அரசு 14 ஆயிரம் கோடி வேளாண் பட்ஜெட்டிற்கு ஒதுக்கியதை முழுமையாக செலவிடவில்லை. வறுமை ஒழிப்புக்காக வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடபட்டுள்ளது. வரக்கூடிய காலங்கள் சோதனையான காலங்களாக இருக்கும், காலநிலை மாற்றத்தின் தாக்கம் வரும் தலைமுறையை அதிகமாக தாக்ககூடும் என்பதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். வேளாண் நிலப்பயன்பாடு 30  விழுக்காடு குறைந்துள்ளதால் ரியல் எஸ்டேட் துறையினால் பஞ்சம் ஏற்படக்கூடிய சூழல் வரும்காலங்களில் ஏற்படும்.

வேளாண் துறைக்கு பயிர் காப்பீடு திட்டம், தனி பாசன ஆணையம் ஏற்படுத்த வேண்டும். காவிரி குண்டாறு திட்டத்திற்கு 14 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுமென அறிவிப்பாகவே மட்டுமே இருக்கிறது. நீர்பாசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வேளான் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் போதுமானதாக இல்லை. நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இது ஒரு மோசடி சட்டம் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்கிற சட்டம். என்எல்சி பயன்பாடு பூர்த்தி செய்யபட்டுள்ளதால் இதற்கு பிறகு என்எல்சி தமிழ்நாட்டிற்கு தேவையில்லை. சூரிய காற்றாலைகள் மூலம் புதுப்பிக்க தக்க மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தலாம். கொள்கை ரீதியில் புதுப்பிக்கதக்க எரிசக்தி பயன்பாட்டிற்கு ஏற்று கொண்டு செயல்படுத்த ஒன்றிய அரசும், தமிழக அரசும் மறுத்து வருகிறது. இனி எல்.எல்.சிக்காக விளை நிலங்களை கையகப்படுத்துதல் கூடாது.

Image

மத்திய அரசு மானியங்களில் பயனாளிகள் 80 லட்சமாக இருந்தது 30 சதவிகிதமாக குறைந்துள்ளது. வெள்ள பாதிப்பு வறட்சி பாதிப்பிற்கு ஆணையம் உருவாக்க வேண்டும். பத்தாயிரம் கோடி ரூபாயில் நொய்யல் ஆற்றினை மீட்டெடுக்க வேண்டும். நாங்கள் எதுவுமே நகைச்சுவையாக சொல்ல மாட்டோம், கோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும். வேறு எதாவது அமைத்தால் எதிர்ப்போம். ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் நாட்டிற்கு நல்லது, செலவு மிச்சமாகும். ஆனால் சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வைத்தால் அது தேசிய கட்சிகளுக்கே சாதகமாக முடியும். நாடாளுமன்ற தேர்தலில் #பாமக நிலைப்பாடு, கூட்டணி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார்” என்றார்.