“தவெக அரசுக்கு அனுபவம் இல்லை” - அன்புமணி ராமதாஸ்
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கூடுதல் அழுத்தம் தர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராம்தாஸ், “கர்நாடகத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து பேச, நீதிக்காக போராட தமிழ்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் அனைத்து உரிமையும் உண்டு. இந்த விவகாரத்தில் இனியும் கர்நாடக அரசை நம்பாமல் CBI விசாரணைக்கு ஆணையிட கர்நாடக, ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கூடுதல் அழுத்தம் தர வேண்டும். இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சிவக்குமார், இதுவரை 3 முறை டெல்லி சென்றுள்ளார். காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும். தவெக அரசுக்கு அனுபவம் இல்லை, இந்த விவகாரத்தில் அதிகாரிகள் பேச்சை அவர் கேட்கக்கூடாது. கர்நாடகாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட 3 தமிழர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வேண்டும். சென்னை வரும் கர்நாடக முதல்வரிடம் கேள்வி எழுப்ப வேண்டும். கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் அம்மாநில வனத்துறையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து தமிழக அரசு கண்டிக்கக் கூடாதா?
மாணவர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று எப்படி சொல்ல முடியும்? இந்த அரசிற்கு அதிகமாக வாக்களித்தது மாணவர்களும், அவர்களைச் சார்ந்தோர்களும்தான். மாணவர்களின் பிரச்னைகளுக்குப் போராடத்தான் செய்வார்கள். இதற்கு உலகம் முழுவதும் பல உதாரணங்கள் உண்டு. மாணவர்கள் போராடக் கூடாது என சுற்றறிக்கை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் அரசு ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கும் தமிழக அரசின் முடிவால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

