அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன ஈகோ? - அன்புமணி கேள்வி
காவிரி நதிநீர் விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு என்ன தயக்கம்? தமிழ்நாடு அரசுக்கு என்ன ஈகோ என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “காவிரி நதிநீர் விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு என்ன தயக்கம்? தமிழ்நாடு அரசுக்கு என்ன ஈகோ? தமிழக அரசு அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். இதை தமிழக அரசு சட்டப்பூர்வமாக அணுக வேண்டும். காவிரி பிரச்சனையில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். முதலமைச்சர், இன்னொரு முதலமைச்சரை பார்ப்பதில் என்ன ரகசியம் உள்ளது? இவங்க நினைச்சிட்டு இருக்காங்க, விஜய் கர்நாடகா போனாருன்னா காவிரிய கொண்டு வந்துருவாரு, மேகதாது அணை திட்டத்தை நிறுத்திருவாருனு... ஆனால் அவர்கள் எத்தனை முதலமைச்சர்களை பார்த்திருப்பார்கள்.
காவிரி பிரச்னை என்பது தவெகவின் பிரச்சனை அல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்னை. கர்நாடக அரசு திட்டமிட்டு காவிரி பிரச்சனையில் பதற்றத்தை உருவாக்குகிறது. கர்நாடக அணையில் உள்ள 6-ல் 1 பங்கு நீரைத் தான் திறக்க உத்தரவிட்டனர். ஆனாலும் கர்நாடகா நீர் இல்லை என்கிறது. தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரை பெற வேண்டும். தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீரை கூட தரக்கூடாது என்ற மனநிலையில் கர்நாடகம் இருக்கும்போது அங்கு சென்று பேச்சு நடத்தி முதல்வர் விஜய் எதை சாதிக்க போகிறார்? பயணத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. மாறாக மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள்தான் தாரை வார்க்கப்படும்” என்றார்.

