"பகலிலேயே பெண்கள் எங்கையும் பாதுகாப்பாக போக முடியாத ஒரு சூழல்"- அன்புமணி ராமதாஸ்

கல்விக்கொள்கையை கடைபிடிக்கவில்லை என்றால் நிதியை தரமாட்டோம் என்று சொல்வது மிக மிக தவறானது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், “கடந்த ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டை விட, தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில், 52 விழுக்காடு உயர்ந்து இருக்கிறது. இது மிகவும் வெட்கக்கேடானது, முதலமைச்சர் மற்றும் ஆட்சியர்களுக்கு அவமானமானது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் மீதான குற்றமும் உயர்ந்து இருக்கிறது. இதில் இருந்து அமைச்சருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியவும் இல்லை, புரியவும் இல்லை. வெறும் அன்றாடம் விளம்பரம் மட்டும் தான். காலையில் 2 மணி நேரம் கால்ஷீட் நடக்கிறது, தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்ற நிலை கூட தெரியாமல் இருக்கிறார்.
கடந்த மூன்று, நான்கு வாரங்களில் தமிழ்நாட்டில், பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்சனைகள், ஆறு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கற்பழிக்கிறார்கள். ஆசிரியர்கள், குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சி செய்கிறார்கள். ஏழு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கூட்டு வன்புணர்ச்சி செய்கிறார்கள். இது பீகார், உத்தரபிரதேசத்தில் நடந்த செய்தி கிடையாது. நம்மளுடைய தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் இதை முதலமைச்சர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார். அதேபோல் காவல்துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. இதற்கெல்லாம் தமிழ்நாட்டில் கஞ்சா, போதை உச்சத்தில் இருப்பது தான் முக்கிய காரணம். நான் பள்ளிக் கூடம் படிக்கும் போது பள்ளிக் கூட வாசலில், மாங்காய் கமரக்கட்டு புளிப்பு மிட்டாய் போன்றவைகள் விற்கப்படும், தற்போது பள்ளிக் கூட வாசலில் கஞ்சா பொட்டலம், போதை மாத்திரை விற்கப்படுகிறது. பள்ளிக் கூட வாசலில் அமெரிக்காவில் என்ன கிடைக்கிறதோ, அபின், கொகைன், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களில் என்ன வேண்டுமோ அது அத்தனையும் கிடைக்கிறது. இது அனைத்துமே காவல்துறைக்கு தெரிந்து தான் நடக்கிறது. கஞ்சா விற்கப்படுகிறது என்றால் அதை வாங்குபவருக்கு எங்கு விற்கிறார்கள் என்று தெரியும்பொழுது அது குறித்த தகவல் காவல்துறைக்கு தெரியாதா என்ன?, அதனால் இது அனைத்துமே அவர்களுக்கு தெரிந்து தான் நடக்கிறது.
தமிழ்நாட்டின் பெயர் ஏற்கனவே கெட்டுப் போய்விட்டது, பெண்கள் தமிழ்நாட்டில் பயம் இல்லாமல் நடமாட முடியாத சூழல் இருக்கிறது. பகல் நேரங்களிலேயே பெண்கள் வெளியில் செல்ல முடியாத நிலைமை தமிழ்நாட்டில் உள்ளது. இதற்கெல்லாம் காரணம் முதலமைச்சரும் முதலமைச்சரின் கீழ் இயங்குகின்ற காவல்துறை மட்டும் தான். சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தில், திமுக மாவட்ட செயலாளர், அவர்களின் கட்சி கூட்டத்தில் பேசும்போது, தர்மபுரி கலெக்டர் மற்றும் எஸ்.பி ஆகியோர் எனக் கேட்காமல் எதுவும் செய்ய முடியாது நான் சொல்வது தான் சட்டம், கீழ் இருக்கும் அதிகாரிகள் நான் சொல்வதை தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என பத்தாவது படித்த தி.மு.க மாவட்ட செயலாளர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு கட்டளை இடுகிறார். இதுதான் தமிழ்நாட்டில் திராவிட மாடலா? இதற்கும் முதலமைச்சர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் கூட இதையெல்லாம் முதலமைச்சர் சொல்லி தான் பேசுகிறேன் என அந்த மாவட்ட செயலாளர் கூறுகிறார்.
அதிகாரிகள் அடிபணியவில்லை என்றால் என்னிடம் கூறுங்கள், அந்த அதிகாரியை மாற்றம் செய்யலாம். இப்படி இருக்கும் போது தமிழ்நாடு எப்படிப்பட்ட மோசமான நிலைமையில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். அதே போல யூடியூபர் சவுக்கு சங்கர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரியை பேசும்போது எத்தனையோ வழக்குகள் போட்டு அவரை கைது செய்து சிறையில் வைத்தீர்கள். அப்படியானால் அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? ஒரு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் யும் கேவலப்படுத்துகிற தி.மு.க மாவட்ட செயலாளர் மீது ஏன் இன்றுவரை நடவடிக்கையோ ஒரு எஃப்ஐஆர் கூட போடவில்லை. தமிழ்நாட்டில் சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது” என்றார்.