டாஸ்மாக் விலை அதிகமானதால், கள்ளச்சாராயம் குடிக்கப் போகிறார்கள்: அன்புமணி ராமதாஸ்

 
அன்புமணி

மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

Image

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “ கள்ளச்சாராயத்தால் 17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு அரசே பொறுப்பு. கள்ளச்சாராயமாக இருந்தாலும் நல்ல சாராயமாக இருந்தாலும் பாதிப்புதான். டாஸ்மாக் மதுபான விலை மூன்று மடங்கு உயர்ந்ததால் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது.  டாஸ்மாக் விலை அதிகமானதால் கள்ளச்சாராயம் குடிக்கப் போகிறார்கள். கள்ளச்சாராய விற்பனை காவல்துறைக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை.

Image

அடித்தள மக்கள் மது இல்லாமல் வாழமுடியாததை போன்ற சூழலை திராவிட கட்சிகள் உருவாக்கியுள்ளன. கள்ளச்சாராய விற்பனையை தமிழ்நாடு அரசின் தோல்வியாக பார்க்கிறேன். தமிழ்நாடு அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்” என்றார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 30க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில்  சங்கர், சுரேஷ், தரணிவேல், மண்ணாங்கட்டி, ராமமூர்த்தி உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  முன்னதாக முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடதக்கது.