"தைப்பொங்கலைப் போல தமிழர்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் பொங்கட்டும்" - அன்புமணியின் பொங்கல் வாழ்த்து!!

 
anbumani

தை மாதம் பிறந்தாலே தமிழர்க்கு தனி உற்சாகமும், தன்னம்பிக்கையும் உண்டாகும் என்று குறிப்பிட்டு அன்புமணி பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழர்களின் தனிப்பெரும் திருநாளான பொங்கல் விழாவையும், தமிழ் புத்தாண்டு நாளையும் கொண்டாடும்  உலககெங்கும் உள்ள தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

anbumani

திருவிழாக்களின் திருவிழா என்பது பொங்கல் திருவிழா தான். தமிழர்களின் வாழ்வு, வாழ்வாதாரம், கலாச்சாரம், இயற்கை வழிபாடு, உழவுத் தொழிலுக்கு உதவிய இயற்கை தொடங்கி கால்நடைகள் வரை அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கும் பண்பாடு, வீரத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு, நண்பர்கள் முதல் உறவுகள் வரை அனைவரும் ஒன்று கூடல் உள்ளிட்ட அத்தனை அம்சங்களையும் கொண்டிருப்பது தான் தமிழர் திருநாளின் சிறப்பு ஆகும். பொதுவாகவே திருவிழாக்கள் கடந்த கால நிகழ்வுகளையும், வெற்றிகளையும் நினைவு கூறவும், தெய்வங்களை வணங்கவும் கொண்டாடப்படுபவை ஆகும். ஆனால், பொங்கல் திருநாள் மட்டும் இயற்கையை வணங்கவும், நன்றி தெரிவிக்கவும் கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கல் திருநாளுக்கு தனிச்சிறப்புகள் உள்ளன. உலகில் விலங்குகளுக்கும், பொருட்களுக்கும் நன்றி தெரிவிக்கும் உயிரினம் தமிழினம் மட்டும் தான். உழவுக்கும் அதன் மூலம் உணவுக்கு உதவிய  கால்நடைகள், ஏர் உள்ளிட்ட உழவுக்கான கருவிகளை வழிபடும் வரலாறு நமக்கு மட்டும் தான் உண்டு. அதேபோல், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கைக்கிணங்க தை மாதம் பிறந்தாலே தமிழர்க்கு தனி உற்சாகமும், தன்னம்பிக்கையும் உண்டாகும். அதேபோல், நமது உழைப்பும் நிச்சயம் வீண்போகாது.

ttn

தைப்பொங்கல் எப்போதும் நன்மைகளை மட்டுமே வழங்கும். அந்த வகையில் தமிழர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகுக்கும் அன்பு, அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, நல்லிணக்கம், ஒற்றுமை, வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து நலங்களையும், வளங்களையும் தைத்திங்களும், தமிழ்ப்புத்தாண்டும் வழங்க வேண்டும். பொங்கல் திருநாளில் பொங்கல் பானையில் புத்தரிசியும், பாலும் கலந்து பொங்குவதைப் போன்று, நமது வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்று கூறி அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.