“இளைஞரணி தலைவர் பதவிக்கு அனுபவம் மிக்க நிர்வாகியை தான் அறிவிக்க வேண்டும்”- ராமதாஸிடம் அழுத்தமாக வலியுறுத்திய அன்புமணி

 
“இளைஞரணி தலைவர் பதவிக்கு அனுபவம் மிக்க நிர்வாகியை தான் அறிவிக்க வேண்டும்”- ராமதாஸிடம் அழுத்தமாக வலியுறுத்திய அன்புமணி

பாமகவில் மாநில இளைஞரணி தலைவர் நியமனத்தில் அன்புமணி ராமதாசுக்கும், அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக தைலாபுரம் இல்லத்தில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசிய அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Image

பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று பட்டானூரில் நடைபெற்ற கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவராக முகுந்தன் அறிவித்தார். இதற்கு  அன்புமணிராமதாஸ் மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சென்னை பனையூரில் உள்ள  புதிய கட்சி அலுவலகத்தில் தொடர்பு கொண்டு இது தொடர்பாக பேசலாம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருந்தார். கருத்து மோதலை சமாதானம் செய்ய பாமக கெளரவ தலைவர் ஜிகே.மணி. தலைமை நிலை செயலாளர் அன்பழகன், மாநில வன்னியர் சங்க தலைவர் பூதா.அருள்மொழி. சட்டமன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், மாநில பொருளாளர் திலகபாமா, பாலு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மருத்துவர் ராமதாசை சந்தித்தி சமானாதம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதேபோன்று  அன்புமணியிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பேச ராமதாசை சந்திக்க அன்புமணிராமதாசை தைலாபுரம் தோட்டத்திற்கு வர வலியுறுத்தினர். அதன் பேரில் இன்று தைலாபுரம் இல்லத்தில் அன்புமணி ராமதாஸ் அக்கட்சியின் நிறுவனரும் தந்தையுமான ராமதாசை அன்புமணி சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சமாதான பேச்சுவார்த்தையில் மூத்த நிர்வாகிகளான அக்கட்சியின் கெளரவ தலைவர் ஜி கே மணி, தலைமை நிலை செயலாளர் அன்பழகன், மயிலம் எம்.எல்.ஏ சிவக்குமார், வழக்கறிஞர் பாலு, முன்னாள் எம்எல்ஏ கார்த்திகேயன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த சமரச பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. முன்னதாக டாக்டர் ராமதசும், அன்புமணி ராமதாசும் சுமார் 15 நிமிடம் தனியாக பேசினார் அதன் பின்னர் தான் நிர்வாகிகளுடன் சேர்ந்த பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

அதனை தொடர்ந்து பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், “தைலாபுரம் தோட்டத்தில் கட்சி வளர்ச்சி பற்றியும் சட்டப்பேரவை தேர்தல், சாதிவாரி கணக்கெடுப்பு அடுத்த போராட்டங்கள் எந்த பகுதியில் செய்யலாம் என்பது குறித்து விவாதித்தோம். வருகின்ற ஆண்டு பாமகவிற்கு முக்கிய ஆண்டாக இருக்கும்” என்றார். மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பாமக ஜனநாயக கட்சி இதில் நடக்கூடியவை சகஜம் தான் உட்கட்சி பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என தெரிவித்தார். பேட்டியின் போதே அன்புமணி ராமதஸ் கண்கலங்கியபடி தான் பேசி இருந்தார். மாநில இளைஞரணி தலைவர் பதவிக்கு அனுபவம் மிக்க நிர்வாகியை தான் அறிவிக்க வேண்டுமென பாமக ராமதாசிடம்  அன்புமணி கண்டிபாக வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கட்சியில் இளைஞரனி தலைவர் பதவியில் முகுந்தன் நீடிப்பரா அல்லது வேறு யாரேனும் நியமிக்கப்படுகிறார்களா என்பது குறித்து அன்புமணி ராமதாஸ் தெரிவிக்கவில்லை.