5 தமிழ் வனொலி நிலையங்களை தரம் குறைக்கும் நடவடிக்கை??.. - அன்புமணி கண்டனம்..

 
அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் உள்ள 5 வானொலி நிலையங்களை தரம் குறைக்கும்  முடிவை  அரசு கைவிட வேண்டும் என  பாமக இளைஞரணி செயலாளரும், எம்.பியுமான  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நாடுமுழுவதும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையங்கள் மூடப்பட்டு விட்டன. தமிழகத்தில்  2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் தூர்தர்ஷன் விடை பெற்றது. ஆனால்  தொலைக்காட்சி நிலையத்தில் இருந்து எப்.எம். வானொலி நிலையம் வழக்கம் போல் செயல்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஏற்கனவே தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள வானொலி நிலையங்கள் மூடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதற்கு பிரசார் பாரதி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

வானொலி மையம்

ஆனால் தற்போது 5 தமிழ் வானொலி நிலையங்களும் தரம் குறைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, புதுவை வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சித் தயாரிப்பை பொங்கல் திருநாளுடன் முடக்கி, அவற்றை நிகழ்ச்சி தயாரிப்பு நிலையங்கள் என்ற நிலையிலிருந்து, தொடர் ஒலிபரப்பு நிலையங்களாக தரம்குறைக்க பிரசார் பாரதி ( prasarbharati) தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

திருச்சி வானொலி நிலையம்

தமிழ்நாட்டு வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி நான் கோரியிருந்த போது அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று பிரசார்பாரதி விளக்கமளித்திருந்தது. ஆனால், முடக்கும் முயற்சிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. ஒரு மாநிலத்திற்கு ஒரு நிகழ்ச்சி தயாரிப்பு வானொலி நிலையம் போதுமானது என்று பிரசார்பாரதி தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது. இது தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் பன்முகத்தன்மை மற்றும் உள்ளூர் பண்பாட்டு பரவலையும், பகிர்தலையும் தடுக்கும். அப்படி செய்யக் கூடாது

5 வானொலி நிலையங்கள் முடக்கப்பட்டால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பார்கள். நாடக, நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் இழப்பார்கள். எனவே இந்த முடிவை கைவிட்டு, 5 வானொலி நிலையங்களும் இப்போதுள்ளவாறே தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்க வேண்டும். ” என்று குறிப்பிட்டுள்ளார்.