பிரதமர் மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! - முதல்வர் ஸ்டாலின் பதிலடி

 
1

தமிழக பாஜக பூத் தலைவர்களுடன் நமோ செயலி வாயிலாக ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற பெயரில் பிரதமர் மோடி நேற்று மாலை கலந்துரையாடினார். அப்போது, பாஜகவின் வெற்றிக்கு பூத் நிர்வாகிகள் செய்திருக்கும் பணிகள் என்ன, ஒவ்வொரு பூத்திலும் மத்திய அரசின் திட்டங்களில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர், அவர்களின் விவரங்கள், முதல் முறை வாக்காளர்களின் பட்டியல், மக்களின் மனநிலை, தமிழகத்தில் குடும்ப ஆட்சி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா, பெண்கள் வரவேற்கக்கூடிய மத்திய அரசின் திட்டங்கள் எவை என்பது உள்பட தமிழத்தில் ஒவ்வொரு பூத்தின் நிலவரங்கள் குறித்து மோடி ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

அப்போது காணொலியில் அவர்களுடன் மோடி பேசியதாவது: ஒவ்வொரு பூத்திலும் 10 குடும்பங்களுக்கு 3 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும். அதில் ஒருவர் கட்டாயம் பெண்ணாக இருக்க வேண்டும். அந்த 10 குடும்பங்களுக்கும் தினமும் சென்று அவர்களுடன் கலந்துரையாடி நட்புறவை வளர்த்துக் கொள்ளுங்கள். 9 கட்சிகள் இணைந்து நவரத்தினங்களாக நமது கூட்டணியில் இருக்கிறார்கள்.

எனவே, ஒவ்வொரு பூத்திலும் தேர்தல் வேலை செய்யும் போது, கூட்டணி கட்சியினரையும் ஒருங்கிணைத்து செய்ய வேண்டும். வெற்றிக்கான ரகசியம் பூத்தில் தான் உள்ளது. ஒவ்வொரு பூத்தையும் வெற்றி பெற்றால் தான், நாடாளுமன்றம் நமக்கு கிடைக்கும். அதிக பிரச்சாரம் செய்வது முக்கியம் அல்ல. அதிக ஓட்டு வாங்குவது தான் முக்கியம்.

நமது கொடியையும், சின்னங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்காக தினமும் ஒரு மணி நேரம் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடி, சின்னத்துடன் பூத்தில் ஊர்வலம் செல்லுங்கள். அதேபோல், வாக்கு இயந்திரத்தில் சின்னம் எத்தனையாவது இடத்தில் இடம் பெற்றிருக்கிறது என்பதை சொல்லுங்கள்.

தமிழ் மொழி தான் உலகின் மூத்த மொழி, தொன்மையான மொழி, பழமையான மொழி என உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தெரிய வேண்டும். அதற்காக இந்த அரசு தொடர்ந்து பாடுபடும். என்னால் தமிழில் பேச முடியவில்லையே என எனது அடிமனதில் வருத்தம் இருக்கிறது. எனக்கு தமிழ் தாய் மொழியாக கிடைக்காதது வருத்தம் தான்.

தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளது. எனவே, 3 நாளுக்கு ஒருமுறை ஒவ்வொரு பிரிவினரையும் அழைத்து அவர்களுடன் சிறப்பு கூட்டங்கள் நடத்த வேண்டும். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என ஒவ்வொரு கருத்துக்கணிப்புகளும் தெரிவிக்கிறது. திமுக அரசின் மீது மக்கள் வெறுப்பின் உச்சத்துக்கு சென்றிருக்கிறார்கள் என தமிழக மக்களை நான் பார்க்கும் போது தெரிகிறது. மத்திய அரசின் நல்ல திட்டங்களை மக்களிடம் சென்று சேர விடாமல், திமுக அரசு தடுத்து நிறுத்துகின்றனர். தடுத்து நிறுத்த முடியாத திட்டங்களில், அவர்களது ஸ்டிக்கரை ஒட்டுகிறார்கள்.

மொத்த தமிழ்நாட்டையும் வெற்றி பெற்று வர வேண்டும் என நான் அண்ணாமலைக்கு உத்தரவிட்டுள்ளேன். அதனால், தனது தொகுதியில் வேலை செய்வதற்கு அவருக்கு நேரம் இருக்காது. எனவே, அந்த வேலையை பூத் நிர்வாகிகள் தான் கவனித்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, நான் தமிழகத்தில் இருக்கும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஒவ்வொருவரையும் அண்ணாமலையாக தான் பார்க்கிறேன். எனவே, அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்று டெல்லி வர வேண்டும். அண்ணாமலை வெற்றிக்கு பூத் நிர்வாகிகள் உத்தரவாதம் தர வேண்டும். இவ்வாறு பேசினார்.

இந்த நிலையில், பிரதமரின் இந்த பேச்சுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
 

"நேற்று மாலைச் செய்தி: தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி!

நேற்று காலைச் செய்தி: அழகிய தமிழ்ச்சொல் 'வானொலி' இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது!. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?. கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?.

ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே, மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?. கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

பிரதமர் மோடி அவர்களே... கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான், அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு!

விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை.

"எங்கும் இந்தி! எதிலும் இந்தி!" என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை!. தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்!" என்று கடுமையாக சாடியுள்ளார்.