பிரதமர் மோடி கேரளா வருகை- கோவையில் ட்ரோன்கள் பறக்க தடை..!
கேரளம் மாநில சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே இருக்கிறது. மேலும் பிரசாரத்திற்கு 10 நாட்களே அவகாசம் இருக்கின்றது. தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள், தங்களின் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக கட்சி தலைவர்கள் கேரளம் மாநிலத்துக்கு அடுத்தடுத்த நாட்களில் வர உள்ளனர்.
அந்த வகையில், பா.ஜ.க சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை 29-ந்தேதி கேரளம் வருகிறார். அவர் திருச்சூரில் நடைபெறும் ரோடுஷோ மற்றும் பாலக்காட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் கேரளா வருகையை முன்னிட்டு, கோவையின் முக்கியமான பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை மதியம் 2 மணியளவில் கோவை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு செல்கிறார். கேரளம் தேர்தல் பரப்புரைக்காக தேசிய ஜனநாய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாளை பாலக்காடு, திருச்சூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

