"காங்கிரஸ் புதுச்சேரியை தனிப்பட்ட குடும்பத்தின் ATM மாதிரி பயன்படுத்துச்சு"- மோடி
புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது புதுச்சேரியில் ரூ.1,571 கோடியில்74 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேல் பரிசளித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “புதுச்சேரியின் வளர்ச்சிக்கு இரட்டை என்ஜின் அரசு தொடர்ந்து செயல்படும். இந்தியா முழுவதும் உள்கட்டமைப்புக்காக ரூ.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு திட்டங்கள் புதுச்சேரி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும். புதுச்சேரியில் சுற்றுச்சூழல் மாசை குறைப்பதில் மின் வாகனங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காங்கிரஸ், திமுக ஆட்சியில் மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகினர். குற்றங்கள் அதிகரிப்பு, அரசியல் நிலையற்றதன்மை போன்ற நிலைதான் இருந்தது. மக்கள் நன்றாக இருந்தால்தான் நாடு முன்னேற முடியும். அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இளைஞர்களின் கனவுகளை நனவாக்கவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
புதுச்சேரி மக்களின் நிம்மதியான வாழ்க்கையே எங்களது நோக்கம் மருத்துவ சிகிச்சைகளுக்காக பிற மாநிலத்தவர்கள் புதுச்சேரியை தேடிவரும் நிலை வரும். காங்கிரஸ் புதுச்சேரியை தனிப்பட்ட குடும்பத்தின் ATM மாதிரி பயன்படுத்துச்சு.. காங்கிரஸ் - திமுக புதுவையின் வளர்ச்சியை தடுக்கும் வேகத்தடையா தான் இருந்திருக்கு.. 2047-க்குள் புதுச்சேரியை வளர்ச்சி அடைந்த புதுச்சேரியாக மாற்றவேண்டும்.காரைக்கால் NIT-யில் புதிய டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பொறியியல் கட்டிடம் மற்றும் நவீன விடுதி வசதிகள் தொழில்நுட்பக் கல்வியை மேலும் வலுப்படுத்தும்” என்றார்.

