ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம்..!!
பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வருகிற 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா ஆகியோர் பீகாரில் நேற்று முற்றுகையிட்டு பிரச்சாரம் செய்தனர். பிரதமர் மோடி நேற்று 2 பிரசார பொதுக்கூட்டங்களில் பேசினார். ரோடுஷோவிலும் பங்கேற்றார். பாட்னாவில் நேற்று மெகா ரோடுஷோ நடந்தது. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அவரது 3-வது ரோடுஷோ இதுவாகும்.
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இங்கு ரோடு ஷோவில் ஈடுபட்டார். முன்னதாக ஆரா மற்றும் நவாடா ஆகிய 2 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசினார். மோடி ஏற்கனவே 2 முறை பீகாரில் பிரச்சாரம் செய்து இருந்தார்.
இதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முசாபர்பூர் மற்றும் வைஷாலி ஆகிய 2 இடங்களில் பிரச்சாரம் செய்தார். இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி ஏற்கனவே பிரச்சாரம் செய்தார். அவர் நேற்று பெகுசராய், ககாரியா ஆகிய 2 இடங்களில் நடைபெற்று பொதுக் கூட்டத்தில் பேசினார். தலைவர்கள் முற்றுகையால் பீகார் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.


