சென்னையில் பிரதமர் மோடி..!! பா.ஜ.,வினர் உற்சாக வரவேற்பு..!!

 
modi

பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு, கவர்னர் ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமரின் வருகையையொட்டி சென்னை விமான நிலையம் மற்றும் கிண்டி சுற்றுவட்டாரப் பகுதிகள் 'சிவப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டு, ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவரது பயணத் திட்டத்தின் முக்கிய விவரங்கள்:இன்று இரவு சென்னை கவர்னர் மாளிகையில் தங்கும் பிரதமர் மோடி நாளை(மார்ச் 1) காலை சென்னை கடற்கரை - எழும்பூர் இடையேயான 4-வது ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

அதை தொடர்ந்து, புதுச்சேரியில் காலை 11:45 மணிக்கு ரூ.2,700 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.PM e-Bus Seva திட்டத்தின் கீழ் மின்சார பஸ்கள், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடங்களை திறந்து வைக்கிறார்.புதுச்சேரியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

அங்கிருந்து மதுரை செல்லும் அவர், மதியம் 3:00 மணிக்கு ரூ.4,400 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 8 ரயில் நிலையங்களை (பொள்ளாச்சி, காரைக்குடி, திருவாரூர் உள்ளிட்டவை) காணொலி வாயிலாகத் திறந்து வைக்கிறார்.என்எச் 332ஏ ( மரக்காணம் - புதுச்சேரி) மற்றும் என்எச்-87 (பரமக்குடி - ராமநாதபுரம்) ஆகிய சாலைகளை நான்கு வழிச்சாலையாக மாற்ற அடிக்கல் நாட்டுகிறார்.

மாலை 4:00 மணியளவில் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.அதனை தொடர்ந்து மதுரை மண்டேலா நகர் மைதானத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்த பயணத்தின் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் ரூ.7,100 கோடிக்கும் அதிகமான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட உள்ளன.