ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பிரதமர் மோடி!

 
modi

பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார். 

பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை 04.50 மணிக்கு சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர் பாபு, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து மாலை 06.00 மணிக்கு சென்னையில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 6-வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்றார். ஸ்ரீரங்கம் கோயிலில் மூலவரை தரிசனம் செய்த பிரதமர் மோடி. கருடாழ்வார் சன்னதியிலும் சாமி தரிசனம் செய்தார். சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர் சன்னதிகளிலும் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார். ரங்கா ரங்கா கோபுரத்திற்கு முன்பு கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். 

modi

இந்த நிலையில்,  பிரதமர் மோடி ராமேஸ்வரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தடைந்த பிரதமர் மோடி அங்கிருந்து ராமநாதசுவாமி கோவிலுக்கு காரில் சென்றடைந்தார். இதனையடுத்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார் பிரதமர் மோடி. இதனை தொடர்ந்து கோவிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்த கிணறுகளில் நீராடிவிட்டு ராமர் பாதத்தை பிரதமர் மோடி தரிசிக்கவுள்ளார்.