பிப்ரவரி மாத இறுதியில் பிரதமர் மோடி அமித்ஷா தமிழகம் வருகை..!

1914ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் பாம்பன் ரயில்வே பாலம் கட்டப்பட்டது. இந்த பாம்பன் பாலத்தின் மீது ரயில் செல்லும் அழகை பார்ப்பதற்காகவை வெளிநாடுகளில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் ராமேஸ்வரத்திற்கு வருவார்கள்.
இந்த பாலம் கட்டி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டதால் பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் பாலத்தில் அடிக்கடி விரிசல் விழுவதாலும் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்த பழைய பாலம் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2019ம் ஆண்டு ரயில் பாலப் பணிகளை பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இதற்காக 550 கோடி மதிப்பிட்டில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்லும்போது மேல்நோக்கி திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், சுமார் 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவில் ஆன தூக்குப்பாலமும் கட்டப்பட்டுள்ளது. இதற்காக கடலில் 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 இணைப்பு கர்டர்களுடன் 37 மீட்டர் உயரம், 77 மீட்டர் நீளத்தில் இந்த செங்குத்து ரயில் தூக்குப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. செங்குந்து ரயில் தூக்கு பாலத்திற்கு அருகில் இரண்டு மாடி கட்டிடமும் கடலிலேயே கட்டப்பட்டுள்ளது. இதில், ஆபரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் உள்ளன.
இந்த பாலத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதை அடுத்து பாலத்தின் நடுவே கப்பல் போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள தூக்குப் பாலத்தை சோதனை செய்வது மற்றும் ரயில் சோதனை ஓட்டம் போன்றவை அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. ரயில்வே தெற்கு வட்ட பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி கடந்த நவம்பர் 13, 14 ம் தேதிகளில் பாம்பன் பாலத்தில் ஆய்வு செய்தார். பாலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து சென்று அதன் கட்டுமான தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த பாலம் பிப்ரவரி மாதம் இறுதியில் திறக்கப்படும் என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் பிப்ரவரி 28ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாகவும் அன்றைய தினம் பாம்பன் பாலத்தை திறந்து வைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பிப்ரவரி 26ம் தேதி ராமநாதபுரத்தில் புதிய பாஜக அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். ராமநாதபுரம் பயணத்தை முடித்தபின் அமித்ஷா கோவை செல்கிறார்.