அரசு பள்ளி விடுதியில் பிளஸ் 1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, அரசு மாதிரி பள்ளியில் (Elite) பதினொன்றாம் வகுப்பு மாணவன் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியை சேர்ந்த நெசவு தொழிலாளி முருகேஷ்- ஷர்மிளா தம்பதியினரின் இரட்டை மகன்களான சஞ்சய் மற்றும் சந்தோஷ் இருவரும் பெருந்துறையில் உள்ள ஈரோடு மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 11.ம் வகுப்பு பயின்று வந்தனர். பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் இருவரும் தங்கி பயின்று வந்த நிலையில், இன்று வழக்கம் போல் வகுப்புக்கு சென்ற சஞ்சய் இடைவேளை நேரத்தில் விடுதிக்கு தனியாக சென்றுள்ளான். அங்கு விடுதி அறையின் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். அடுத்த சிறிது நேரத்தில் விடுதிக்குச் சென்ற மற்றொரு மாணவன் மூலம் சஞ்சய் தூக்கிட்ட சம்பவம் தெரிய வந்தது. இது குறித்து விடுதி காப்பாளர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை போலீசார் சஞ்சய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சிவகிரியில் உள்ள பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர் பள்ளி பாடங்களை படிக்க முடியாமலும் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் ஏற்பட்ட மன உளைச்சலாலும் சஞ்சய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது ஏற்கனவே வேறு பள்ளிக்கு தன்னை மாற்றுமாறு பெற்றோரிடம் அவர் வலியுறுத்தி வந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சஞ்சய்யின் பெற்றோரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி முன்பாக திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் எனினும் அவர்கள் கலைந்து செல்லாததால் அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதற்கிடையே பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சஞ்சய் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பேச்சு வார்த்தைக்கு பின் நாளை உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர் மகனின் இறப்பில் மர்மம் இருப்பதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பெற்றோர் அதுவரை சடலத்தை பெறப்போவதில்லை என தெரிவித்துள்ளனர். அரசு மாதிரி பள்ளியில் பயின்று வந்த மாணவன் பள்ளி விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


