இதற்கு பதில் கூறுங்கள்..! 3 ஆண்டுகளில் திமுக எத்தனை மதுபானக் கடைகளை மூடியுள்ளது?: டிடிவி தினகரன்!

 
1

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளதாவது:-

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் இதுவரை எத்தனை மதுபானக்கடைகளை மூடியிருக்கிறது? சட்டமன்றத்தில் மூத்த அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துச்சாமி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரும் சூழல் இல்லை என்று சொல்லும் அதே நேரத்தில், திமுக அளித்த வாக்குறுதியின் படி எத்தனை மதுபானக் கடைகள் முழுமையாக மூடப்பட்டிருக்கிறது என்ற விவரத்தை வெளியிடாதது ஏன்?

அதே போல, உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை எனவும், அரசு விற்கும் மதுபானத்தில் ‘கிக்’ இல்லை என்பதால் கள்ளச் சாராயத்தை நாடிச் செல்வதாகவும் அவை முன்னவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசியிருப்பது, அவருக்கும் அவர் வகிக்கும் பதவிக்கும் உகந்ததல்ல.

ஏற்கனவே தமிழகத்தில் போதைப் பொருட்களின் பயன்பாடு வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்திருக்கும் நிலையில், ஒருபுறம் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக விற்கப்படும் மதுபானங்களாலும், மறுபுறம் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச் சாராயத்தாலும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் சீரழிந்து கேள்விக்குறியாகி கொண்டிருக்கிறது.

எனவே, இனியும் காலம் தாழ்த்தி மக்களை ஏமாற்றாமல் தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையிலும் மதுபானக் கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கை கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.